ஒரே மருத்துவமனையில் '26 நர்சுகள்', 3 டாக்டர்களுக்கு 'கொரோனா'... 'சீல்' வைக்கப்பட்ட வளாகம்.. 'அதிர்ச்சியை' ஏற்படுத்திய சம்பவம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Apr 06, 2020 06:33 PM

மும்பையிலுள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் 26 நர்சுகள், 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona Mumbai Wockhardt Hospital Nurses Doctors Test Positive

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாட்டிலேயே அதிக அளவாக மகாராஷ்டிராவில் 781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மும்பையில் உள்ள பிரபல ஒக்கார்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் 26 நர்சுகள், 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மருத்துவமனைக்குள் செல்லவோ அல்லது மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லவோ யாருக்கும் அனுமதி இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்து நடத்தப்படும் 2 பரிசோதனைகளில் தொற்று இல்லை என்பது உறுதியாகும் வரை இந்த தடை தொடரும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள மாநகராட்சி கூடுதல் ஆணையாளர் சுரேஷ் ககானி, "இது துரதிர்ஷ்டவசமானது. ஒரே மருத்துவமனையில் இத்தனை பேருக்கு எப்படி பாதிப்பு பரவியது என்பது பற்றி தலைமை சுகாதார அதிகாரியின் கீழ் அமைக்கப்பட்ட குழு விசாரணை மேற்கொள்ளும்" எனத் தெரிவித்துள்ளார்.