'கைகொடுத்தது பிளாஸ்மா சிகிச்சை...' 'டெல்லியில்' குணமடைந்த '49 வயது' நபர்... 'இந்தியாவில் முதல் வெற்றி...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 21, 2020 12:28 PM

இந்தியாவிலேயே முதல்முறையாக டில்லியை சேர்ந்த கொரோனா வைரஸ் பாதித்த நபர் பிளாஸ்மா சிகிச்சை மூலமாக குணமடைந்துள்ளார்.

corona infected person has recovered through plasma therapy

கொரோனா வைரஸ்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதனை கட்டுப்படுத்த பல்வேறு மருத்துவ வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அந்த வகையில், பிளாஸ்மா சிகிச்சை முறை நல்ல பலனைக் கொடுக்கும் என மருத்துவர்கள் பலரும் பரிந்துரைத்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்திலிருந்து பிரிக்கப்படும் பிளாஸ்மாவை புதிதாக பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தும் பட்சத்தில், கொரோனாவை எதிர்க்கும் எதிர்ப்பு ஆற்றல் ரத்தத்தில் உருவாகி எளிதில் குணமடைய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். குணமடைந்த ஒருவர்  400 மி.லி பிளாஸ்மாவை தானமாக வழங்கலாம் எனவும், அதைக்கொண்டு இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவிய போது, ரத்தத் தட்டையணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு நோயாளிகளுக்கு செலுத்தியபோது குணமடைந்தனர்.

இதேபோல, கோரோனா சிகிச்சைக்கும் இந்த முறை வெற்றிகரமாக கைகொடுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, டில்லியில் உள்ள மேக்ஸ் தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்.,4ம் தேதி கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட 49 வயதுடைய நபருக்கு உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து, ஏப்ரல் 8ம் தேதி வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், அவரது குடும்பத்தினர், பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்தனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சைக்கு பின், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு இரண்டு முறை சோதனை செய்ததில் எதிர்மறை முடிவுகள் வரவே, அந்த நபர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக மேக்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.