வேண்டாம் CAA, NRC... மு.க.ஸ்டாலின், கனிமொழி வீட்டு வாசல்களில்... எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய கோலங்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 30, 2019 08:59 AM
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றுக்கு எதிராக கோலம் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கோலமிட்டு 6 பெண்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்த செயலுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. எம்.பி. கனிமொழி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது வீட்டின் முன்பு என்.ஆர்.சி, சி.ஏ.ஏ ஆகிய சட்டங்கள் வேண்டாம் என வாசகமாக எழுதி நேற்று கோலமிட்டிருந்தார். அதன்பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க. மகளிரணியினர், தங்கள் வீட்டில், என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ. சட்டங்களுக்கு எதிராக கோலமிட்டு எதிர்ப்பு தெரிவிக்க மகளிரணி செயலாளர் கனிமொழி அழைப்பு விடுத்திருந்தார்.
கட்சித் தலைவர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்பேரில், இந்த அழைப்பை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், இன்று காலை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் கோலம் இடப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இல்லத்திலும் எதிர்ப்பு தெரிவித்து கோலமிடப்பட்டுள்ளது.
#NRC_CAA_Protests எங்கள் இல்லத்தில்.. pic.twitter.com/e7nZ13YLPZ
— M.K.Stalin (@mkstalin) December 30, 2019
