'இப்படி எல்லாம் செஞ்சா... கண்டிப்பா கொரோனாவ நாம ஜெயிச்சிடலாம்!'... தென் கொரியா மாடலை கையிலெடுத்த நகராட்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாதென்கொரியா நாட்டை பின்பற்றி ஆமதாபாத் நகரில் கொரோனா பரவலை தடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் அதன் சக்திக்கும், சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
தென்கொரியாவில் "தீவிர கண்காணிப்பு; தேடிச்சென்று சோதனை" என்ற திட்டத்தின் அடிப்படையில் கொரோனா பரவலை தடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி குறிப்பிட்ட நகரையோ அல்லது ஊரையோ சல்லடை போட்டு கண்காணித்து, யாருக்கு எல்லாம் பிரச்சினை இருக்கிறதோ அவர்களை கண்டறிகிறார்கள். மற்றொரு புறம் வலியச்சென்று சந்தேகம் இருப்பவர்களுக்கு நோய் கண்டறியும் சோதனைகளை செய்து பாதிப்புக்கு உரியவர்களை தனிமைப்படுத்துகிறார்கள்.
தென்கொரியா நாட்டின் இந்த தடுப்புமுறை, நல்ல பலன்தர கூடும் என்பதால் குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகர நிர்வாகம் இதை பின்பற்றி, கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து வருகிறது.
நகரின் மக்கள் தொகை 65 லட்சம் ஆகும். இதுவரை கொரோனா தாக்குதலுக்கு 6 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக இருக்கிறது. வியாழக்கிழமை மட்டும் 58 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நகரில் நோய் ஆபத்துக்கான பகுதிகள் என்று 14 இடங்களை கண்டறிந்து, அங்கு மருத்துவ பணியாளர் நேரில் சென்று ரத்தமாதிரிகள் எடுத்து சோதனை செய்து வருகிறார்கள்.
கடந்த 4ம் தேதி வரை 57 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு இருந்ததாகவும், 8ம் தேதி அது 840 ஆக உயர்ந்திருப்பதாகவும் நகர கமிஷனர் விஜய்நேரு தெரிவித்தார்.
கொரோனா பாதித்தவரை ஆரம்பநிலையில் கண்டறிந்துவிட்டால் 10 பேரின் உயிர்களை காப்பாற்ற முடியும் என்றும், கொரோனா தொற்று இருக்கும் ஒருவரை கண்டறிய தவறி விட்டால் அவரால் 400 பேருக்கு பரவ வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.