ஊரடங்கை தளர்த்துவது 'இதற்குத்தான்' வழிவகுக்கும்... பகிரங்க 'எச்சரிக்கை' விடுத்த 'உலக' சுகாதார அமைப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Apr 11, 2020 04:47 AM

ஊரடங்கை தளர்த்துவது வைரஸின் மறுதாக்குதலுக்கு வழிவகுக்கும் என, உலக சுகாதார அமைப்பு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

Hasty virus lockdown lift could spark deadly resurgence

உலகளவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருக்கின்றன. இதனால் அத்தியாவசிய காரணங்களை தவிர மக்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

வரும் செவ்வாய்க்கிழமையுடன்(ஏப்ரல் 14) இந்த ஊரடங்கு முடிவுக்கு வருவதால் இதை நீட்டிக்கலாமா? இல்லையா? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவிருக்கிறார். கூட்டத்திற்கு பின் மோடி ஊரடங்கு குறித்த தனது முடிவினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் உலகின் பல்வேறு நாடுகள் அமல்படுத்தியுள்ள ஊரடங்கை விரைவாக தளர்த்துவதால் வைரஸின் அதிபயங்கர மறு எழுச்சிக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில் ''ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள சில நாடுகள் ஏற்கனவே மக்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும் என விதித்துள்ள கட்டுபாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளது. அனைவரையும் போல உலக சுகாதார அமைப்பும் நாடுகள் விதித்துள்ள சில கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என விரும்புகிறது.

அதே நேரம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மிகவும் விரைவாக தளர்த்துவது வைரஸின் பயங்கர மறு தாக்குதலுக்கு வழி வகுக்கும். இந்த நிலைமையை திறம்பட நிர்வகிக்கத்தவறினால் மாறுபாடான எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்,'' என தெரிவித்து இருக்கிறார்.