மருத்துவர்கள் மீது 'கல்வீச்சு' நடத்திய மக்கள்... எல்லாத்துக்கும் காரணம் 'அந்த' வீடியோ தான்... 'அதிர்ச்சி' பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாமருத்துவர்கள் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதற்கு போலி வீடியோக்கள் தான் காரணம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தத்பாக்கி பாக்கல் என்ற குடிசைப்பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் கொரோனா தொற்றுக்கு 65 வயது முதியவர் ஒருவரும் பலியானார். அங்கு உள்ள யாருமே வெளிநாடுகளுக்கு எதுவும் செல்லவில்லை என்பதால் அவர்களுக்கு எப்படி கொரோனா பரவியது? என சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் விசாரணை நடத்திட மருத்துவ குழுவினர் சென்றனர். ஆனால் அங்கு சென்று விசாரணை நடத்திக்கொண்டிருந்த மருத்துவ குழுவினரை அந்த பகுதி மக்கள் திடீரென கற்களை கொண்டு தாக்க ஆரம்பித்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் நாடு முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைப்பார்த்த பலரும் மக்களின் இந்த மோசமான செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மருத்துவ குழுவினரை அப்பகுதி மக்கள் தாக்கியதற்கு வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட போலி வீடியோவே காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது மருத்துவ குழுவினர் அப்பகுதியில் உள்ள ஆரோக்கியமான மக்களை பிடித்துக்கொண்டு போய் கொரோனா ஊசி போடவிருப்பதாக வாட்ஸ் அப்பில் வீடியோவை சிலர் பரப்பியுள்ளனர். இதனால் தான் அப்பகுதி மக்கள் கற்களால் மருத்துவ குழுவினரை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் வாட்ஸ் அப்பில் போலி வீடியோவை பரப்பிய 4 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், '' மருத்துவ பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுப்பவர்கள் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்,'' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
