'சரக்கு ரயில் ஏறி 17 பேர் பலி...' 'தண்டவாளத்துல அசந்து தூங்கிட்டு இருந்தப்போ...' இந்தியாவை உலுக்கிய அடுத்த கோர நிகழ்வு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதால் சுமார் 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் தனது தாக்கத்தை அதிகரிக்கும் இந்த இக்கட்டான சூழலில் வேறு விதங்களிலும் பல அசம்பாவிதங்கள் ஏற்பட்டு வருகிறது. நேற்று காலை இந்தியாவில் இயங்கி வரும் ஆலைகளில் நச்சு வாயு வெளிவந்து 12 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த வேற்று மாநில தொழிலாளர்கள் மீது சரக்கு இரயில் ஏறி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் உட்பட சுமார் 17 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து தெரிவித்த போலீசார், விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் மத்தியப் பிரதேசத்திற்கு கால் நடை பயணமாக சென்றுள்ளனர் எனவும், ஜல்னாவிலிருந்து பூசாவலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர் எனவும் கூறினார்.
மேலும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் இரயில் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. எனவே இரயில் இயங்காது என நினைத்து தங்களின் சொந்த மாநிலத்திற்கு செல்ல இரயில் தண்டவாளங்கள் வழியே நடந்து சென்றுள்ளனர். மேலும் நீண்ட நடைபயணம் காரணமாக சோர்வு ஏற்பட்டு இரவு தண்டவாளங்களின் இடையில் படுத்துள்ளனர்.
அதனிடையே இன்று அதிகாலை சுமார் 5.15 மணிக்கு ஜல்னா மற்றும் அவுரங்காபாத் இடையே செல்லும் சரக்கு ரயிலில், தண்டவாளத்தில் படுத்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறி விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிதறிக்கிடந்த சடலங்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மகாராஷ்டிரா விபத்தில் இறந்த செய்தி வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
