இந்தியா முழுவதும் 'ரத்து' செய்யப்பட்ட ட்ரெயின்கள்... 'டிக்கெட்' கட்டணத்தை திரும்பப்பெற... 'இதை' மட்டும் செய்யுங்க!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 25, 2020 01:19 AM

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் ரெயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களுக்கான பணத்தை திரும்பப்பெற பயணிகள் ரெயில்வே அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டாம் என தெற்கு ரெயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

Southern Railway request don\'t come to Booking Centres

கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த ஏற்கனவே எடுக்கப்பட்ட முயற்சிகளை வலுப்படுத்த தெற்கு ரெயில்வேயால் 22-3-2020 முதல் 31-3-2020 வரை அனைத்து ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதை கணக்கில் எடுத்துக்கொள்வது மற்றும் பொதுமக்கள் கூட்டத்தைத் தவிர்ப்பது போன்றவற்றுக்காக கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் பி.ஆர்.எஸ்., யுடிஎஸ் டிக்கெட் கவுண்டர்கள் மூடப்படுகிறது. அனைத்து வகையான ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு, பயணிகள் டிக்கெட் கட்டணத்தைத் திரும்பப் பெறும் விதிகளை தளர்த்துவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 21 முதல் ஜூன் 21 வரையிலான பயண காலப்பகுதியில் ரெயில்வே ரத்து செய்த அனைத்து ரெயில்களுக்கும், பயணத்தின் தேதியிலிருந்து 3 மாதங்கள் வரை டிக்கெட் சமர்ப்பிப்பதின் வாயிலாக கவுண்டரில் முழு பணத்தைத்திரும்பப் பெறலாம்.

பணத்தைத் திரும்ப பெற தளர்த்தப்பட்ட விதிகளை மனதில் வைத்து, பொதுமக்கள் சமூக இடை வெளிக்காகவும், பொது இடங்களில் கூட்டத்திற்கு எதிராகவும் வழங்கப்பட்ட பல்வேறு ஆலோசனைகளுக்கு இணங்க, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களுக்காக ரெயில்வே முன்பதிவு அலுவலகத்தில் பயண கட்டணத்தை திரும்ப பெற இப்போது வர வேண்டாம். டிக்கெட் கவுண்டரும் மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுக்கான முன்பதிவு அலுவலகத்தில் யுடிஎஸ் டிக்கெட் கவுண்டர்கள் 22-3-2020 முதல் 31-3-2020 வரை செயல்படாது.

எனவே 31-3-2020 வரையிலான இந்த காலகட்டத்தில் முன்பதிவு அலுவலகத்தில் உள்ள பிஆர்எஸ் கவுண்டர்களில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெறுவதாக நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 31-3-2020 வரை இந்த கால கட்டத்தில் முன்பதிவு அலுவலகத்தில் டிக்கெட் கவுண்டர்களில் புதிய முன் பதிவு எதுவும் செய்யப்படாது.

இருப்பினும் ஐ.ஆர்.சி.டி.சி. வலைதளத்தின் மூலம் முன்பதிவு செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு கிடைக்கும். யு.டி.எஸ். ஆன் மொபைல் பயன்பாடும் 31-3-2020 வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஏற்பாடுகள் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் எந்தவொரு பயணியும் வந்தால் அவர்களுக்கு உதவுவதற்கு ரெயில் நிலையங்கள், முன்பதிவு அலுவலகங்கள் மற்றும் பி.ஆர்.எஸ். மையங்களில் போதுமான ஊழியர்கள் உள்ளனர்.

ரெயில்வே ஒரு போதும் முற்றிலுமாக பணி நிறுத்தம் செய்யப்படாது. அதன் ஊழியர்கள் இந்திய அரசாங்கத்தின் பொது சேவைகளின் ஒரு பகுதியாக தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பவர். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பயணிகள் ரெயில்வே நிர்வாகத்துடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.