'ஊரடங்கு' முடிந்ததும்... ஏப்ரல் 15-லிருந்து 'ரயில்' சேவை 'தொடங்கப்படுகிறதா?'... ரயில்வே துறை வெளியிட்டுள்ள 'அறிக்கை'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கிற்குப் பிறகு ரயில் சேவை தொடங்கப்படுமா என்ற கேள்விக்கு ரயில்வே துறை பதிலளித்துள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரலவலைத் தடுக்கும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. மேலும் கடந்த 25ஆம் தேதி முதல் சரக்கு ரயிலைத் தவிர அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் வரும் 14ஆம் தேதி ஊரடங்கு முடிந்தபின் ரயில்கள் எப்போதிருந்து இயக்கப்படும், முக்கியமான வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம், ஒவ்வொரு கட்டமாக இயக்கப்படலாம் என பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன.
இதைத்தொடர்ந்து இதுகுறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்து ரயில்வே துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ரயில்களை இயக்குவது குறித்து ரயில்வே துறை சார்பில் எந்த விதமான முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்துவிட்டு பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். சமூக ஊடங்களில் வரும் ஆதாரமில்லாத செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.