'தனியார் பேருந்தும் வேனும்' நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 15 பேர் பலி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | May 12, 2019 11:40 AM
ஆந்திராவில் தனியார் பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அருகே ஹைதராபாத் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது வேல்துருத்தி என்ற இடத்தில் சாலையின் குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க, பேருந்து ஓட்டுநர், பேருந்தை திருப்பியபோது ஓட்டுரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்து கொண்டிருந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் இருந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் இருந்தவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை கர்னூல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், 'ஆந்திராவின் கர்னூலில் நடைபெற்ற சாலை விபத்து வருத்தம் அளிக்கிறது. விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்' என பதிவிட்டுள்ளார்.
சாலை விபத்து பற்றி அறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
