சூறைக்காற்றுடன் கூடிய கனமழை.. உயிரிழந்த வெளிநாட்டுப் பறவைகள்.. நெல்லையில் சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 30, 2019 07:32 PM

நெல்லை மாவட்டத்தில் வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக, கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் நூற்றுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பறவைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

many birds died heavy wind and rain nellai birds sanctuary

நெல்லை மாவட்டம், கூந்தங்குளம் பகுதியில் சுமார் 130 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. கடந்த 1994-ம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால், கூந்தங்குளம் கிராம மக்களும் பறவைகளைப் பாதுகாத்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதில்லை.

மக்களின் சிறப்பான பராமரிப்பு காரணமாக வீடுகளின் கூரைகளிலும் வீடுகளுக்கு அருகில் இருக்கும் மரங்களிலும் பறவை இனங்கள் கூடுகட்டி வசிக்கின்றன. அத்துடன் குளத்தில் உள்ள மரங்களிலும் வசிக்கின்றன. இந்த சரணாலயத்தில் செங்கால்நாரை, கூழக்கடா, அரிவாள்மூக்கன், பூநாரை, பட்டைத்தலை வாத்து என 43 வகையான வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன.

ஜெர்மனி, சைபீரியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் கூந்தங்குளத்துக்கு வருகை தந்து குஞ்சு பொரித்து மீண்டும் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் செல்கின்றன. இந்நிலையில், நாங்குநேரி மற்றும் கூந்தங்குளம் பறவைகள் சரணாலயப் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அதைத் தாக்குப் பிடிக்க முடியாமல் மரத்தின் மேலிருந்த பறவைகளின் கூடுகள் கீழே விழுந்தன. அதனால் பறவைகளின் குஞ்சுகள் காற்றில் சிக்கி கீழே விழுந்தன. இதில் பல பறவைகள் உயிரிழந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளுக்கு கால்களிலும் இறக்கைகளிலும் காயம் ஏற்பட்டன. 

இந்தத் தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் மற்றும் மருத்துவர்கள் அந்தப் பகுதிக்குச்  சென்று காயம்பட்டுக் கிடந்த பறவைகளை மீட்டு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளித்தனர். சூறைக்காற்றில் சிக்கி உயிரிழந்த நூற்றுக்கும் அதிகமான பறவைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் குழிதோண்டிப் புதைத்தனர்.

சூறைக்காற்று காரணமாக விவசாயத்துக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வாழைகள் சாய்ந்து விட்டன. சில இடங்களில் கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. இந்தப் பகுதியைப் பொறுத்தவரையிலும், பறவைகள் பெரும் சேதத்துக்கு உள்ளாகிவிட்டன.

Tags : #NELLAI #BIRDSANCTUARY #DIED #HEAVYRAIN #WIND