‘அவுட் பண்றதுக்கு முன்னாடி இத பண்ணிருக்கலாம்’..அஸ்வின் மீதான விமர்சனத்துக்கு ராகுல் டிராவிட்டின் பதில்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 27, 2019 04:59 PM
மன்கடட் முறையில் ராஜஸ்தான் அணி வீரர் பட்லரை பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் அவுட் செய்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 4 -வது லீக் ஐபிஎல் போட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்தது.
இதனை அடுத்து 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் விளையாடியது. அப்போது 12 -வது ஓவரை வீசிய பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், பந்தை வீசுவதற்கு முன்னாள் கிரீஸை தாண்டிய ராஜஸ்தான் வீரர் பட்லரை அஸ்வின் மன்கடட் முறையில் அவுட் செய்தார். இது அஸ்வின் மீது பல விமர்சனங்களையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இது குறித்து கிரிகெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் அஸ்வின் மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில்,‘மன்கடட் முறையில் அஸ்வி எடுத்த பட்லரின் விக்கெட் சரியானதுதான். கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டுதான் அவர் செயல்பட்டுள்ளார். ஆனால் அவுட் செய்வதற்கு முன்னாள் பட்லருக்கு ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கலாம். அதன் பிறகும் பட்லர் கிரீஸை தாண்டினால் அப்போது அவரை அவுட் செய்திருக்கலாம். இந்த விவகாரத்தைப் பெரிது படுத்தி அஸ்வின் கெட்டவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர். ஒரு பயிற்சியாளராக எனது அணி வீரர்களுக்கு கூறுவது ஒன்றுதான். விதிகளை மீறுபவர்களை முதலில் எச்சரியுங்கள், அது தொடர்ந்தால் அதற்கான தண்டனையைக் கொடுங்கள்’ என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று(27.03.2019) கிங்ஸ் லெவன் பஞ்சாப்-கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 6 -வது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடென் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.