‘ஒத்துக்கிறோம்.. ஆனா எங்களுக்கு ஒண்ணும் 60 வயசு ஆயிடல’.. சிஎஸ்கே வீரரின் பதிலடி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Mar 27, 2019 04:28 PM
ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கி களைகட்டிவரும் நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிய போட்டியில் டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இரண்டாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
அதிகமான இளம் வீரர்கள் டெல்லி அணியில் இருந்ததாலும், சீனியர் வீரர்கள் சென்னை அணியில் இருந்ததாலும் இந்த ஆட்டத்தை ஜூனியர்களுக்கும் சீனியர்களுக்குமிடையேயான ஆட்டம் என்று பேசப்பட்டது. டெல்லி அணியில் தவான், அமித் மிஸ்ரா, இஷாந்த் போன்றோரைத் தவிர பெரும்பாலானோர் 30 வயதுக்குட்பட்டவர்களானவர்கள். இவர்களுள் பிரித்வி ஷா 19 வயதானவர். சென்னை அணியில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். இதனால் சென்னையின் வெற்றிக்கு வாட்சன் மற்றும் பிராவோ முக்கியக் காரணமாக அமைந்ததாக பேச்சுகள் எழுந்தன. உண்மையில் வாட்சன் 44 ரன்கள் எடுத்ததுடன், பிராவோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
எனினும் சென்னை அணியின் வெற்றிக்குப் பிறகு பேட்டியளித்த பிராவோ, வயது ஒரு பொருட்டல்ல,அது வெறும் நம்பர்தான் என்பதை கடந்த ஐபிஎல் சீசனிலேயே நிரூபித்துவிட்டதாகவும், சென்னை அணிபற்றி பேசும்போதெல்லாம் வயதைப் பற்றி பேசுகிறார்கள் என்று கூறியவர், தங்கள் அணியினருக்கு ஒன்றும் 60 வயது ஆகிவிடவில்லை என்றும் 30 வயது என்பது இளம் வயதுதான் என்று கூறினார். மேலும் தங்களுக்கு அனுபவம் இருக்கலாம், ஆனால் அனுபவம் எல்லா நேரமும் வெற்றியைத் தேடித்தராது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிற அணிகளுடன் ஒப்பிட்டால் சென்னை அணி வீரர்கள், வேகமானவர்கள் அல்ல என்பதை ஒப்புக்கொள்வதாகவும், அதே சமயம் ஸ்மார்ட்டாக விளையாட முடியும் என்றும், தங்கள் பலம் மற்றும் பலவீனத்தை தாங்கள் அறிந்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.