‘டெல்லி அணியை ஜெயிச்சதுக்கு இதுதான் காரணம்’.. ‘நாங்க இதுல கொஞ்சம் வீக்’.. விளக்கமளித்த தோனி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 27, 2019 12:12 AM

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 5 -வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

IPL 2019: CSK defeat DC by 6 wickets

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான 5 -வது ஐபிஎல் லீக் போட்டி இன்று(26.03.2019) டெல்லியில் நடைபெற்றது. இப்போட்டியில் விளையாடுவதற்காக டெல்லி சென்ற சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் டெல்லி அணியில் ரிஷப் பண்ட், சிரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்களும், சூப்பர் கிங்ஸில் தோனி, ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன் போன்ற அனுபவ வீரர்களும் உள்ளனர். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இதில் அதிரடியாக ஆடிய ப்ரித்வி ஷா 24 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து டெல்லி அணியின் கேப்டன் ஷிரேயாஸ் ஐயர் களமிறங்கினார். அப்போது ஜடேஜா வீசிய ஓவரில் ஷிரேயாஸ் ஐயர் அடிக்க முயற்சி செய்யும் போது தோனி ஸ்டெம்பிங் செய்தார். ஆனால் அவர் கால் க்ரீஸ் உள்ளே இருந்ததால் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து 20 ஓவரின் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியது. 19.4 ஓவரின் முடிவில் 150 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக வாட்சன் 44 ரன்களும், தோனி 32 ரன்களும், ரெய்னா 30 ரன்களும் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய தோனி,‘ நாங்கள் எதிர்பார்த்ததை விட முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகள் விழுந்தது. இதில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் டெல்லியை 150 ரன்களுக்கு எங்களால் கட்டுப்படுத்த முடிந்தது.மேலும் 2 -வது இன்னிங்ஸில் மைதானம் ஓரளவுக்கு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் பீல்டிங்கில்தான் நாங்கள் வீக்காக இருக்கிறோம். பீல்டிங்கை பொறுத்தவரை அதிக முன்னேற்றங்கள் தேவை’ என தோனி தெரிவித்துள்ளார்.

Tags : #IPL #IPL2019 #MSDHONI #WHISTLEPODU #DCVCSK 💛🦁 #YELLOVEAGAIN