பதவி நாற்காலி கிடைக்காததால், கட்சிக்கூட்டத்தில் இருந்த 300 நாற்காலிகளை எடுத்துச்சென்ற எம்எல்ஏ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Mar 27, 2019 04:15 PM

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட  அனுமதி வழங்காததால், அதிருப்தியடைந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், கட்சிக் கூட்டங்களுக்கு வழங்கியிருந்த நாற்காலிகளை எடுத்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

denied lok sabha ticket congress mla takes away 300 chairs from office

மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருப்பவர் அப்துல் சதார். இவர் சிலோட் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருகின்றார். வரும் மக்களவைத் தேர்தலில், அவுரங்காபாத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி 'சீட்' வழங்கும் என அப்துல் சாதர் பெரிதும் எதிர்பார்த்ததாகக் கூறப்படுகிறது. அதற்கான பணிகளிலும் அப்துல் சாதார் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்தப்படி சீட் வழங்காமல், சுபாஷ் ஜாம்பாத் என்பவருக்கு காங்கிரஸ் கட்சி 'சீட்' வழங்கியதாக தெரிகிறது. இதனால், பெரும் அதிர்ச்சிக்குள்ளான அப்துல் சதார், தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், அவுரங்காபாத் காங்கிரஸ் அலுவலகத்தில் தேர்தல் கூட்டம் நடக்க இருந்தது குறித்து சதாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அங்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற சதார், கூட்டத்திற்காக போடப்பட்டிருந்த, '300 நாற்காலிகள் தனக்கு சொந்தமானது' எனக்கூறி அவற்றை எடுத்துச் சென்றுவிட்டார். இது தொடர்பாக சிலோட் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான அப்துல் சதார் கூறுகையில், 'நாற்காலிகள் எனக்கு சொந்தமானவை. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டத்திற்காக நான் தான் கொடுத்திருந்தேன். ஆனால் தற்போது கட்சியிலிருந்து நான் விலகி விட்டதால், அவற்றை எடுத்துச் சென்று விட்டேன்' என்று அப்துல் சாதர் தெரிவித்துள்ளார்.

நாற்காலிகள் இல்லாததால் காந்தி பவனில் நடைபெற இருந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர், அகில பாரதிய கிசான் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து நாற்காலிகள் கொண்டுவரப்பட்டு தேர்தல் கூட்டம் நடைப்பெற்றது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரே நாற்காலிகளை கொண்டுச் சென்ற சம்பவம் அவுரங்கபாத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : ##MLA ##CONGRESS ##LOKSABHAELECTION2019