'வேலைக்கு வராதோர் ஊதியத்தை பிடித்தம் செய்யலாம்...' 'உயர்நீதிமன்றத்தின்' உத்தரவால் அதிர்ந்து போன 'மாநில மக்கள்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த, தயாரிப்பு துறை நிறுவனங்கள், வேலைக்கு வராத தொழிலாளர்களின் ஊதியத்தை சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பிடித்தம் செய்யலாம் என மஹாராஷ்ட்ரா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுதும் உள்ள தொழில்துறை நிறுவனங்கள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஊரடங்கின் போது தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களும், தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பல்வேறு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தொழில் முடங்கியுள்ளதால், ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு, 50 சதவீத ஊதியம் வழங்க அனுமதிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதே போன்ற ஏராளமான மனுக்கள் மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி குகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுக்களை விசாரித்த நீதிபதி ''இது போன்ற மனுக்கள் உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், அதில் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
அதேசமயம், நேரில் சென்று வேலைபார்க்க அவசியமற்ற பணிகளில் உள்ளோருக்கு முழு ஊதியம் வழங்கப்படும் என நம்புவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், மஹாராஷ்டிர அரசால் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட சில தொழிற்பேட்டைகளில் பணிக்கு வராதோரின் ஊதியத்தை, உரிய சட்ட விதிமுறைகளின்படி பிடித்தம் செய்யலாம் என்றும், ஊரடங்கு இல்லாத பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் இது பொருந்தும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இம்மனு மீதான விசாரணை, வரும், 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக தனது உத்தரவில் நீதிபதி குறிப்பட்டார்.