‘ஊரடங்கால் வெளியே போக முடியல’.. அதான் ‘இத’ பண்ணலாம்னு நெனச்சோம்.. ‘சபாஷ்’ போட வைத்த கணவன்-மனைவி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 22, 2020 11:44 AM

ஊரடங்கு காலத்தில் பொழுதை வீணாக்காமல் கணவன், மனைவி தங்கள் குழந்தைகளுடன் வீட்டின் அருகே கிணறு தோண்டிய சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Husband and wife dig 25 feet deep well outside house during lockdown

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவை இல்லாமல் மக்கள் வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கால் மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் டிவி பார்ப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது என பொழுதை கழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் வாசிம் மாவட்டத்தில் உள்ள கார்கேரா என்ற கிராமத்தை சேர்ந்த கஜானன் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து வீட்டருகே ஒரு கிணற்றை தோண்டியுள்ளனர். நவீன இயந்திரங்கள் ஏதுமின்றி கடப்பாரை, சம்மட்டி, மண்வெட்டி ஆகிய கருவிகளை கொண்டே 21 நாள்களில் 25 அடி ஆழம் தோண்டியுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த கஜானன், ‘ஊரடங்கு உள்ளதால் வெளியே செல்ல முடியவில்லை. அதனால் நானும் என் மனைவியும் வீட்டருகே கிணறு தோண்டலாம் என முடிவெடுத்தோம். இதற்காக பூஜை போட்டு எங்களது வேலையை ஆரம்பித்தோம். நாங்கள் கிணறு தோண்டுவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் முதலில் எங்களை ஏளனம் செய்தனர். ஆனால் 25 அடி ஆழத்தில் தண்ணீரை பார்த்தவுடன் எங்களது முயற்சியை அனைவரும் பாராட்டினர்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.