இத்தாலியில் பரபரப்பு!.. ஊரடங்கு அமலில் இருப்பதால்... 'மாஃபியா கும்பல் செய்த விநோதமான காரியம்!'... கையறுநிலையில் அரசு!
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலியில் கொரோனா ஊரடங்கால் வறுமையில் வாடும் மக்களுக்கு மாபியா கும்பலால் வீடு வீடாகச் சென்று உணவு விநியோகம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான இத்தாலி, இப்போது கொரோனா நோயால் நிலைகுலைந்து போயுள்ளது.
அந்நாட்டிலும் வறுமையில் மக்கள் வாழும் பகுதிகள் நிறைய உண்டு. குறிப்பாக, தென் பிராந்தியங்களான கம்பானியா, கலப்ரியா, சிசிலி, புக்லியா ஆகியவற்றில் ஏழைகள் அதிகம். இவர்களில் பெரும்பாலானோர் அன்றாட கூலித் தொழிலாளர்கள் ஆவர்.
தற்போது, கொரோனா தாக்குதல் காரணமாக இத்தாலி முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் இந்த பிராந்தியங்களின் முக்கிய நகரங்களான நேப்பிள்ஸ், பலெர்மோ, பாரி, கட்டன்சரோ ஆகியவற்றில் வறுமையில் வாடும் மக்கள் போதிய உணவுப்பொருட்கள் கிடைக்காமல் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இவர்களுக்கு இப்பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பிரபல மாபியா கும்பல்கள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன.
வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் மக்களுக்கு வீடு வீடாகச் சென்று இந்த கும்பல்களைச் சேர்ந்தவர்கள் பாஸ்தா, குடிநீர், பால், மாவு உள்ளிட்ட உணவு பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர். தங்களது செல்வாக்கு அதிகமாக உள்ள பகுதிகளில் கடைக்காரர்களை மிரட்டி, அவர்களையே உணவு பொருட்களை வீடுதோறும் விநியோகம் செய்யவும் வைக்கின்றனர். போலீசாராலும் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இது, இத்தாலியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
"இதை அனுமதித்தால் எதிர்காலத்தில் இதுபோன்ற பெரும் கொள்ளை கும்பல்களை எதுவும் செய்ய முடியாத நிலை உருவாகி விடும்" என்று சமூக ஆர்வலர்கள் இத்தாலிய அரசை எச்சரித்து உள்ளனர்.
இதை ஒப்புக் கொண்டுள்ள இத்தாலிய உள்துறை மந்திரி லூசியானா லமோர்கிஸ் உடனடியாக விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
ஆனாலும், மக்களின் வறுமை காரணமாக மாபியா கும்பல்களின் பகிரங்கமான இந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இயலாத சூழலே காணப்படுவதாக கூறப்படுகிறது.
