'30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும்’... ‘ரேபிட் டெஸ்ட் கிட்கள்’... ‘சீனாவில் இருந்து இந்தியாவிற்கு எப்போது வருகிறது?’
முகப்பு > செய்திகள் > தமிழகம்30 நிமிடங்களில் கொரோனா குறித்து விரைவாக பரிசோதனை செய்யும் ரேபிட் கருவிகள் சீனாவிடம் இருந்து நாளை இந்தியா வரவுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உள்துறை, சுகாதாரத் துறை செயலாளர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் கங்காதர் ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அடுத்த 6 வாரங்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதற்கான மருந்து பொருட்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் முதல்கட்டமாக வரும் 15 ஆம் தேதி இந்தியா வர உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இதற்கிடையில் முன்னதாக தமிழகத்திற்கு வரவேண்டிய கருவிகள் அமெரிக்கா சென்றதாக கூறப்பட்டது. அதுகுறித்த கேள்விக்கு அதற்கான தகவல் இல்லை என அதிகாரிகள் கூறினர். ஏற்கனவே கேரளா இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை கொண்டு தான் விரைவாக சோதனை செய்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் கொரோனாவுக்கு 70 விதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றுவருவதாகக் கூறியுள்ளது. மேலும், சீனாவிற்கு மாற்றாக மருந்துப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.