'முதல் முறையாக ஒத்துக்கொண்ட’... ‘உலக சுகாதார அமைப்பு’... ‘அந்த வைரஸைவிட 10 மடங்கு ஆபத்தான கோவிட்-19’... ‘லாக் டவுன் விஷயத்தில் எச்சரிக்கை’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 14, 2020 11:57 AM

உலகளவில் கடந்த 2009-ம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய ஸ்வைன் ஃப்ளூ வைரஸைவிட 10 மடங்கு ஆபத்தானது கோவிட்-19 வைரஸ் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

WHO acknowledged Covid 19 is 10 times deadlier than swine flu H1N1

சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளை ஈவு இரக்கமில்லாமல் பதம் பார்த்து வருகிறது. இந்நிலையில், இதுவரை கோவிட்-19 வைரஸின் தன்மை குறித்து வெளிப்படையான கருத்து தெரிவிக்காமல் இருந்த உலக சுகாதார அமைப்பு முதல்முறையாக துணிச்சலாக 10 மடங்கு கொடியது கோவிட்19 வைரஸ் என்று ஒத்துக்கொண்டுள்ளது. ஏனெனில், கடந்த 2009-ம் ஆண்டு உலகளவில் பாதிப்பை ஏற்படுத்திய ஸ்வைன் ஃப்ளூ( H1N1) வைரஸாஸ் 18 ஆயிரம் பேர் தான் உயிரிழந்தார்கள். 6 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டனர்.

ஆனால் கொரோனா வைரஸால் உலகில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியதிலிருந்து இதுவரை 19 லட்சத்து 24 ஆயிரத்து 263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் ஜெனிவாவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ‘கோவிட்-19 வைரஸ் என்பதை உலக நாடுகளுக்கு எச்சரிக்கையாகத் தெரிவிக்கிறேன். கோவிட்-19 வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியது. அதேசமயம், மிகவும் மெதுவாகவே கட்டுப்படுத்த முடியும். குறைக்கவும் முடியும்.

ஆதலால் உலக நாடுகளில் உள்ள அரசுகள் தங்கள் நாடுகளில் கடைப்பிடிக்கும் லாக்டவுனை மிகவும் இறுக்கமாகப் பின்பற்றுங்கள். மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து சமூக விலகலை கடைப்பிடிக்கச் சொல்லுங்கள். இந்த கோவிட்-19 பெருந்தொற்று நோய் உலக அளவில் பெரும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தரக்கூடியது. கடந்த வாரங்களில் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.

சில நாடுகள் கொரோனாவி்ன் தாக்கம் குறைந்ததால் கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளன. அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், கட்டுப்பாடுகளை மிகவும் மெதுவாக, படிப்படியாக தளர்த்துங்கள். இல்லாவிட்டால் கோவிட்-19 மிகமோசமான, பேரழிவை தரும் வகையில் மீண்டெழும். போதுமான மருத்துவ வசதிகள் தயாராக இருக்கும் பட்சத்தில், படிப்படியாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம். நீங்கள் சரியாக லாக்டவுனை பராமரிக்காவிட்டாலும் மோசமான விளைவுகளைச் சந்தி்க்க நேரிடும். பாதிக்கப்பட்ட நாடுகளிடம் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துங்கள் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வருகிறது.

சில நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை திடீரென அதிகரித்து, இரு மடங்காக உயர்ந்து வருகிறது. அந்த நாடுகள் விரைவாக தொடக்கத்திலேயே சோதனைகளை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, கவனத்துடன் பாதுகாத்து கண்காணிக்க வேண்டும். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் தடுப்பூசிகளை கண்டுபிடிப்பது அவசியமானதாகும்’ என டெட்ராஸ் தெரிவித்தார்.