'நாம நிறைய சவப்பெட்டிகளை சுமக்க கூடாதுன்னா...' 'தயவுசெய்து இந்த விஷயத்துல மட்டும் அரசியல் பண்ணாதீங்க...' உலக சுகாதார அமைப்பின் தலைவர் பதிலடி...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Apr 09, 2020 11:01 AM

ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் கொரோனா விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டிய நேரம் இது இல்லை, இல்லையென்றால் நாம் அதிக சவப்பெட்டிகளை தோளில் சுமக்க நேரிடும் என அமெரிக்க அதிபருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

World Health Organization leader appeals to US President

உலக நாடுகளில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. ஆனால் கொரோனா வைரஸ் முதலில் உருவாகிய நாடான சீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கோவத்தை உலக சுகாதார அமைப்பின் மீது திருப்பினார்.

சீனாவும், உலக சுகாதார அமைப்பும் சேர்ந்து இந்த தொற்றை மறைத்து விட்டது, போதுமான எச்சரிக்கை அறிவிப்புகளை உலக சுகாதாரஅமைப்பு தெரிவிக்கவில்லை எனவும்,  உலக சுகாதார அமைப்பு சீனா அரசுடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் இனி உலக சுகாதார அமைப்புக்கு தர போகும் நிதியை நிறுத்தப் போவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது, நிருபர் ஒருவர் ட்ரம்பின் குற்றச்சாட்டை பற்றி கேட்டதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இங்கே நமக்கு தேவைப்படும் ஒற்றுமை, அனைத்து உலக நாடுகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு இந்த இக்கட்டான சூழலில் இருந்து நாம் வெளிவரவேண்டும்.

மேலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, சீனாவுடன் ஒன்று சேர்ந்து செயல்பட்டு இந்த ஆபத்தான  கொரோனா வைரஸை தோற்கடிக்க வேண்டும். அனைத்து உலக நாடுகளில் இருக்கும் அரசியல் கட்சிகளை நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் நமக்கு நம் நாட்டு மக்களை காப்பாற்றுவதே முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். இதில் நாம் அரசியல் செய்ய தேவையில்லை. இல்லையென்றால் நாம் அதிக சவப்பெட்டிகளை சுமக்கவேண்டியதாக இருக்கும். நீங்கள் அதிகமான சவப்பெட்டிகளை உங்கள் தோளில் சுமக்க விரும்பவில்லையென்றால், கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்.

மேலும் நான் ஒரு கறுப்பினத்தவன், நீக்ரோ என்பதில் எனக்கு எப்பொழுதுமே பெருமை தான் கொள்வேன். என்ன மீது எந்த தனிப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் கொரோனோவை ஒழிக்கும் இந்த பணியிலிருந்து விலகமாட்டேன். அதுமட்டும் இல்லாமல் ஆப்பிரிக்க மக்கள் மீது தடுப்பூசி சோதனை நடத்தப்படுவதை எப்போதும் நான் அனுமதிக்கமாட்டேன்.

தற்போது நமக்கு தேவைப்படும் இரு விஷயங்களை நான் சொல்கிறேன். ஒன்று ஒற்றுமை, மற்றொன்று ஒருமைப்பாடு. மக்களின் நலனுக்காக ஒன்றுபட்டு நாம் கொரோனா வைரஸை அழிக்கவேண்டும்.

எந்த வசதி படைத்த நாடாக இருந்தாலும் ஒற்றுமை இல்லாவிட்டால் கொரோனா வைரஸை ஒழிப்பது கடினம். இதை மனதில் வைத்து கொண்டு செயல்படவேண்டும். இந்த கொரோனா வைரஸில் அரசியல் ஆதாயம் தேடவேண்டாம் என மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். அதற்கு நிறைய வழிகள் உள்ளன, மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதை பிரயோகிக்க வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்

Tags : #TRUMP