ஒழுங்கா 'அமெரிக்காவுக்கு' மருந்த அனுப்பிருங்க... இல்லன்னா 'தக்க பதிலடி' கொடுக்கப்படும்... 'இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 07, 2020 12:58 PM

நாங்கள் ஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

Trump threatens India if it does not send ordered drugs

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு ஐரோப்பாவை திணறடித்த கொரோனா தற்போது அமெரிக்காவில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 30 ஆயிரத்து 331 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 67 ஆயிரத்து 4 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 255 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 871 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா ஆர்டர் செய்திருந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், அசித்ரோமைசின் போன்ற மருந்துகள் உட்பட பல்வேறு மருத்துவ பொருட்களை இந்தியா எங்களுக்கு வழங்க வேண்டும் என அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் உரையாடும்போது வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால், இந்தியாவில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதனால் அமெரிக்கா ஆர்டர் செய்திருந்த மருந்துகளை ஏற்றுமதி செய்ய இயலாது எனத் தெரிவித்தது.  இதனால் டிரம்ப் கேட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.

இந்நிலையில், வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், "இந்திய பிரதமர் மோடியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவால்  ஆர்டர் செய்யப்பட்ட மருந்துகளை அனுப்பி வைக்க அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும்" என கூறியதாகக் குறிப்பிட்டார்.

"ஒரு வேளை அவர் மருந்துகளை அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதி அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும், ஏன் பதிலடி கொடுக்கக் கூடாது?" எனக் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, தன் அனுபவத்தில் இப்படி ஒரு மிரட்டும் அரசு குறித்து கேள்விப்பட்டதில்லை என அமெரிக்க அதிபரின் பேச்சு குறித்து சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.