பிங்க் கலர்ல பெயிண்ட் அடிச்சது ஒரு குத்தமா?.. பெண்ணுக்கு விதிக்கப்பட்ட ₹19 லட்சம் அபராதம்... வைரல் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்காட்லாந்து நாட்டில் வீட்டின் முன்பக்க கதவுக்கு பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடித்ததற்காக பெண் ஒருவருக்கு 19 லட்ச ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள் அந்நாட்டு அதிகாரிகள். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து இணையதளங்களில் பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது.
ஸ்காட்லாந்து நாட்டின் தலைநகரான எடின்பரோவின் நியூ டவுன் பகுதியில் வசித்து வருபவர் மிராண்டா ஜாக்சன். 48 வயதான இவர் தற்போது தனது பரம்பரை வீட்டில் வசித்து வருகிறார். 1981 ஆம் ஆண்டு இவரது பெற்றோரால் இந்த வீடு வாங்கப்பட்டிருக்கிறது. இதனிடையே ஜாக்சன் மிராண்டாவின் பெற்றோர் மரணமடைந்த பிறகு, கடந்த 2019 ஆம் ஆண்டு அந்த வீட்டை புனரமைக்க நினைத்திருக்கிறார் அவர்.
இதனையடுத்து புனரமைப்பு வேலைகளும் நடைபெற்றிருக்கின்றன. அழகிய வேலைப்பாடுகள் கொண்ட வீட்டை பார்த்து பார்த்து பெயிண்ட் அடித்திருக்கிறார் மிராண்டா. 2 குழந்தைகளுக்கு தாயான அவர் இறுதியில் தான் விரும்பியபடி வேலைகள் முடிவடைந்த பிறகு மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் குடியேறியுள்ளார். ஆனால், கொஞ்ச நாளிலேயே அவருக்கு வினோத சிக்கல் வந்திருக்கிறது.
எடின்பர்க் நகர கவுன்சிலில் இருந்து மிராண்டாவிற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், நகரத்தின் பாரம்பரிய முறைகளுக்கு எதிராக வீட்டின் முன்பக்க கதவுகளுக்கு பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. மேலும், உலக பாரம்பரிய இடமாக திகழும் பகுதியின் விதிமுறைகளை மிராண்டா மீறியதாக கூறி 20 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 19 லட்ச ரூபாய்) அபராதமும் விதித்திருக்கிறது அமலாக்கத்துறை.
இதுபற்றி பேசியுள்ள மிராண்டா,"இந்த நோட்டீஸ் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. விதிமுறைகளின்படி வீட்டின் கதவு அடர் நிறத்தில் இருக்க வேண்டுமாம். நான் பிங்க் நிறத்தில் கதவுக்கு பெயிண்ட் அடித்திருந்தேன். எனக்கு அந்த வண்ணம் பிடித்திருந்தது. ஆனால், இதற்காக அபராதமும் விதித்திருக்கிறார்கள். அருகில் உள்ள வீடுகளில் வெவ்வேறு வண்ணங்களில் பெயிண்ட் அடித்திருக்கின்றனர். அதுபற்றி நான் கேள்வி எழுப்பியிருந்தேன். ஆனால், அவை குறித்து யாரேனும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுகிறார்கள்" என்றார்.
இந்நிலையில், வீட்டின் முன்பக்க கதவுக்கு வெள்ளை நிறம் அடிக்குமாறு பரிந்துரை செய்த நகர கவுன்சில் அதற்கு நவம்பர் 7 ஆம் தேதி வரை அவகாசமும் கொடுத்துள்ளது. இருப்பினும் தனது வீட்டு கதவுக்கு சிவப்பு நிற பெயிண்ட் அடிக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார் மிராண்டா.