"என்ன நடந்துச்சுன்னு இந்நேரம் வரை மர்மமாவே இருக்கு".. அடுத்தடுத்து சரிந்த 20 பேர்.. உடனே மூடப்பட்ட தீம்பார்க்.. அதிர்ந்துபோன அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் உள்ள வாட்டர் தீம்பார்க் ஒன்று, அங்கு இருந்த மக்களுக்கு அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் தெரியாமல் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

தீம் பார்க்
இங்கிலாந்தின் கென்ட் மாகாணத்தில் அமைந்துள்ளது வைட்மில்ஸ் வேக் வாட்டர் அண்ட் அக்குவா பார்க் (Whitemills Wake Water and Aqua Park). இங்கிலாந்தில் வரலாறு காணாத கோடை வெப்பம் தகித்துவருவதால் மக்கள் வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள வாட்டர் தீம்பார்க்குகளுக்கு சென்றுவருகின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த தீம் பார்க்குக்கு சென்ற மக்கள் கொஞ்ச நேரத்தில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்றை எதிர்கொண்டிருக்கின்றனர்.
தீம் பார்க்கில் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்த சுமார் 20 பேர் ஒரேமாதிரியான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். பல்வேறு வயதை சேர்ந்த இவர்கள் வாந்தி மற்றும் மயக்கம் ஆகிய சிரமங்களை சந்தித்தனர். இதனையடுத்து, இந்த தகவல் அங்கிருந்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பாதிப்படைந்த மக்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டதுடன் தற்காலிகமாக மொத்த தீம் பார்க்கையும் மூடுவதாக அதிகாரிகள் அறிவித்தனர். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடலின் வெப்பநிலை சட்டென அதிகரித்ததுடன், வாந்தியும் ஏற்படவே அபாய சங்கு ஊதப்பட்டிருக்கிறது.
மர்மம்
இதுகுறித்து பேசிய இந்த தீம் பார்க்கின் இயக்குனர் வெய்ன் கூப்பர்,"என்ன நடந்தது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு சேகரிக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகள் எங்களிடம் இருந்தன. ஆனால் அவை தெளிவாகவே இருந்தன. 20 பேருக்கு வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன. ஆனால் அந்த வாரத்தில் மையத்திற்கு சுமார் 2,000 மக்கள் வந்திருந்தனர். இருப்பினும் இந்த தீம்பார்க் திறந்தவெளி ஏரியில் அமைந்திருக்கிறது. குளோரினேட்டட் நீச்சல் குளத்தில் இல்லை. ஆகவே என்ன நடந்தது என்பது புதிராகவே இருக்கிறது" என்றார்.
மேலும், தீம் பார்க் மூடப்பட்ட உடன் தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அவற்றின் முடிவுகள் வெளிவரும் வரையில் தீம் பார்க் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

மற்ற செய்திகள்
