"உங்களுக்கு 8 கோடி ரூபாய் ஜாக்பாட் அடிச்சிருக்கு'.. தம்பதிக்கு வந்த மெயில்.. ஏமாத்துறாங்கன்னு நெனச்சவங்களுக்கு காத்திருந்த ஷாக்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனை சேர்ந்த தம்பதிக்கு லாட்டரியில் 1 மில்லியன் யூரோ ஜாக்பாட் அடித்திருக்கிறது. ஆனால், முதலில் இதனை ஏமாற்று வேலை என நினைத்து இருவரும் நம்ப மறுத்திருக்கிறார்கள்.
லாட்டரி
பிரிட்டனில் அரசு அனுமதியுடன் லாட்டரி விநியோகம் நடைபெற்று வருகிறது. தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க விரும்பும் நபர்கள் இந்த லாட்டரிகளை வாங்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில் சில சமயங்களில் விபத்து போல சில நபர்களுக்கு அதிர்ஷ்டம் அடிப்பதையும் பார்த்திருக்கிறோம். பிரிட்டனை சேர்ந்த தம்பதிக்கும் இதேபோன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.
பிரிட்டனை சேர்ந்தவர் ராப். பொறியாளரான இவருக்கு 48 வயதாகிறது. இவருடைய மனைவி ரூத் கிப்லின் ஓய்வு விடுதி ஒன்றை நிர்வகித்து வருகிறார். கிப்லினுக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்திருக்கிறது. வாடிக்கையாக ஒவ்வொரு வாரமும் லாட்டரி வாங்கும் அவர் ஒருவாரம் வாங்க மறந்துவிட்டார். அப்போது அவருடைய கணவர் ராப் நியாபகப்படுத்த உள்ளூர் கடைக்கு சென்று லாட்டரியை வாங்கியுள்ளார்.
கராத்தே வகுப்பு
கிப்லின் உள்ளூரில் அமைந்துள்ள கராத்தே வகுப்பிற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். வகுப்புக்கு செல்ல வேண்டியிருந்ததால் லாட்டரியை பரிசோதிக்க அவருக்கு நேரம் இல்லாமல் போயிருக்கிறது. அதன்பிறகு லாட்டரி பற்றியே அவர் மறந்துபோயிருக்கிறார். அடுத்தநாள் தனது கணவருடன் நீச்சல் குளத்துக்கு செல்ல கிளம்பிக்கொண்டிருந்த கிப்லினுக்கு ஒரு மெயில் வந்திருக்கிறது. அதில் ஒரு மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாய்) பரிசு விழுந்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், யாரோ தங்களை ஏமாற்ற நினைப்பதாக கருதி நீச்சலடிக்க கிளம்பிச் சென்றிருக்கிறார் கிப்லின்.
சந்தேகம்
இருப்பினும் காரில் பயணித்தபோது கிப்லின் - ராப் இருவரும் தங்களுக்கு வந்த மெயில் பற்றியே சிந்தித்திருக்கின்றனர். ஒருவேளை அது உண்மையாக இருந்தால் எப்படி இருக்கும் என இருவரும் பேசியபடியே வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்கள். அப்போதுதான் லாட்டரி நிர்வாகத்திலிருந்து போன்கால் வந்திருக்கிறது. அதில் இந்த தம்பதிக்கு 1 மில்லியன் யூரோ பரிசு விழுந்திருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இதனையடுத்து இருவரும் சந்தோஷத்தில் துள்ளி குதித்திருக்கின்றனர்.
இந்த பரிசுத்தொகையை கொண்டு தங்களுடைய வீட்டை பெரிதுபடுத்த இருப்பதாக கூறும் இந்த தம்பதியினர் ஜெட் ஒன்றை வாங்கி சுற்றுலா செல்லவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.