"நைட்டு ரெயில் ஏறி தூங்குன மனுஷன்.." அதிகாலையில் ஜன்னல் வழியா கண்ட காட்சி.. அதிர்ந்து போன பயணிகள்
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் இருந்து ஸ்காட்லாந்து செல்வதற்கு கலிடோனியன் ஸ்லீப்பர் ரயில் ஏறிய பயணி ஒருவர், அதிகாலை எழுந்து பார்த்ததும் அவர் கண்ட காட்சி, கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.
இங்கிலாந்தின் கலிடோனியன் ஸ்லீப்பர் ரயில், பயணிகளுக்கு மிகவும் விருப்பமுள்ள ஒரு ரயில் சேவையாக இருந்து வருகிறது.
இதற்கு காரணம், ஒரு நாள் இரவு பயணிப்பதற்கான இந்த ரயிலில், தனியாக படுக்கை வசதி, காலையில் டீ, காஃபி மற்றும் காலை உணவுகளுடன் உபசரிப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை சிறப்பாக செய்து வருகிறது. ஆனால், அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த ஸ்லீப்பர் ரயிலில் இதுவரை கண்டிராத வினோதமான நிகழ்வு, சமீபத்தில் நடந்ததாக அதில் 15 ஆண்டுகளாக பயணித்து வரும் பயணி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜிம் மெட்கால்ஃபே என்ற பயணி ஒருவர், ஸ்காட்லாந்தில் இருந்து லண்டனுக்கு செல்ல காலிடோனியன் ஸ்லீப்பர் ரயிலில் ஏறி உள்ளார். இரவு சுமார் பத்தரை மணி அளவில் ரயில் ஏறிய ஜிம், 11 அளவில் தூங்கி உள்ளார். அதிகாலை வேளையில் எந்திரித்து பார்த்தபோது கடும் அதிர்ச்சி ஒன்று அவருக்கு காத்திருந்தது. அதாவது, தான் சென்று சேர வேண்டிய லண்டன் ரயில் நிலையம் வராமலேயே இருந்ததைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், 15 ஆண்டுகளாக இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருவதாகவும், பல விதமான வினோதமான திருப்பங்களை நான் சந்தித்து இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது ரொம்ப விசித்திரமாக இருக்கிறது என குறிப்பிட்டு, தான் இரவு நேரம், ரயில் ஏறிய ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ ரெயில் நிலையத்தை விட்டே ரயில் நகரவில்லை என்பதை காலையில் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
இரவு முழுவதும் அதே இடத்திலேயே அந்த ரயில் நின்றிருந்த நிலையில், வேலைக்கு செல்லும் ஜிம் இனி என்ன செய்வது என்றே தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். காலையில் டீ, காபி மற்றும் உணவுடன் வந்த ஒருவர், என்னை எழுப்பியதோடு ரயில் கிளம்பவே இல்லை என ஜிம்மிடம் கூறினார். அப்போது ஜன்னல் வழியாக பார்த்த ஜிம் அதிர்ந்தே போனார். அதன் பின்னர், ரயிலில் இருந்த பயணிகளை வெளியேறும் படி கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், மீண்டும் வீட்டுக்கு திரும்ப வேண்டிய நிலை, ஜிம் உள்ளிட்ட அனைத்து பயணிகளுக்கும் உருவானது.
இது தொடர்பாக கலிடோனியன் ஸ்லீப்பருக்கான நிர்வாக இயக்குனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி, லைனில் அடையாளம் காணப்பட்ட தவறு காரணமாக இப்படி நிகழ்ந்தது என்றும், தீவிர வெப்பநிலை நெட்வொர்க் முழு சிக்கல்களை ஏற்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் தங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி ஸ்லீப்பர் ரயிலில் பயணிக்கும் நபர் ஒருவர், இரவு முழுவதும் ஒரே இடத்தில் ரயில் நின்றது பற்றி குறிப்பிட்ட பதிவு, தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.