"7 வருஷத்துக்கு ஒருதடவை.. அதுவும் ஒரே நாள் தான் அந்த தீவை பார்க்க முடியும்".. அட்லாண்டிக் கடலில் இருக்கும் அமானுஷ்ய தீவு..!
முகப்பு > செய்திகள் > உலகம்அட்லாண்டிக் கடலில் இருப்பதாக சொல்லப்படும் வினோதமான தீவு ஒன்று பல ஆண்டுகளாக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதற்கு காரணம் அதன் பின்னால் இருக்கும் மர்ம பக்கங்கள் மட்டுமே.

உலகத்தின் முக்கால்வாசி பகுதியில் கடல்நீர் சூழ்ந்துள்ளது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக ஏற்பட்ட டெக்டானிக் பிளேட்களின் நகர்வு பூமியின் வரைப்படைத்தையே மாற்றியது. சொல்லப்போனால் இன்னும் இந்த மாற்றம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படித்தான் உலகின் கண்டங்கள் உருவாகின. தீவுகள் உருவானதும் இப்படியான நிகழ்வினால் தான். சுற்றிலும் கடலால் நிரம்பிய தீவுகள் பார்ப்பதற்கு ரம்யமாக இருப்பதாலேயே மக்களின் விருப்பத்துக்கு உரிய இடமாக இவை இருக்கின்றன. ஆனால், உலகில் உள்ள எல்லா தீவுகளும் அப்படியானதில்லை. சில தீவுகள் மர்மங்கள் நிறைந்த கதைகளை பல்லாயிரமாண்டுகளாக சுமந்து நிற்கின்றன. அவற்றுள் ஒன்று தான் ஐக்கிய ராஜ்யத்துக்கு அருகில் அமைந்திருந்ததாக சொல்லப்படும் ஹை பிரேசில் தீவு.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை
மேற்கு அயர்லாந்தின் கடற்கரையில் இருப்பதாகக் கூறப்படும் இந்த மர்மமான தீவு 1865 வரை வரைபடங்களில் இருந்திருக்கிறது. ஆனால், இன்னும் அதன் சரியான இடத்தை யாரும் சரிபார்க்க முடியவில்லை. 1325 ஆம் ஆண்டிலேயே இந்த தீவை பலர் பார்த்திருப்பதாக செவி வழி செய்திகள் உலவுகின்றன. ஒவ்வொரு ஏழு வருடங்களுக்கும் ஒரு நாள் மட்டுமே மாலுமிகள் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவைப் பார்க்க முடியும் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.
தொலைந்துபோன நகரமான அட்லாண்டிஸ் போலவே இந்த தீவு குறித்தும் பல்வேறு மாய கதைகள் மக்களிடையே இருக்கின்றன. அதன் காரணமாகவே இந்த தீவை கண்டுபிடிக்க பலரும் முயற்சித்து வருகிறார்கள்.
கதைகள்
1674 இல் பிரான்சில் இருந்து அயர்லாந்திற்குப் பயணம் செய்யும் போது கேப்டன் ஜான் நிஸ்பெட் என்பவர் தனது குழுவினருடன் இந்த தீவில் சிக்கிக்கொண்டதாக ஒரு புகழ்பெற்ற கதை இருக்கிறது. அப்போது, கல்லறையில் இருந்து ஒருவர் எழுந்து கப்பலை நோக்கி சென்றதாக அந்த கதையில் குறிப்பிடப்படுகிறது. இதனை தொடர்ந்து ஐந்தாம் நூற்றாண்டில் அயர்லாந்தை சேர்ந்த செயிண்ட் பிரெண்டன் என்பவர் இந்த தீவை கண்டறிந்து இங்கே பாதிரியாளர்களை அழைத்து சென்றதாகவும் புராண கதைகள் இருக்கின்றன.
இந்த கதைகளில் மிகவும் சுவாரஸ்யமானது 1872 இல் ராபர்ட் ஓ'ஃப்ளாஹெர்டி மற்றும் டி.ஜே. வெஸ்ட்ராப் செய்த பயணம் பற்றியது தான். இவர்கள் மூன்று முறை இந்த தீவுக்கு சென்றதாகவும், இறுதியாக தங்களது குடும்பத்தினரை தீவுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களது கண்முன்னே தீவு மறைந்ததாகவும் அவர் பதிவு செய்திருக்கிறார்.
இப்படி ஏராளமான தகவல்கள் இந்த தீவு குறித்து சொல்லப்பட்டாலும், இந்நேரம் வரையில் இந்த தீவு இருக்கும் இடம் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியே வரவில்லை. இதுவே, அந்த தீவு பற்றிய கதைகளை மேலும் சுவாரஸ்யமாக்கி வருகின்றன.

மற்ற செய்திகள்
