மொத்தமா 42 அடிக்கு 'நகம்'.. "பின்னாடி இருக்குற உருக்கமான சபதம்.." கின்னஸ் சாதனை படைச்சும் கண் கலங்கும் பெண்
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த உலகைச் சுற்றி ஏராளமான சாதனைகள் உருவாக்கப்பட்டு வருவதும், ஏற்கனவே நிகழ்த்தி வைக்கப்பட்ட சாதனைகள் முறியடிக்கும் முயற்சியில், பலர் கின்னஸ் உள்ளிட்ட சாதனைகளை படைத்தது வருவது அடிக்கடி நடைபெறும் ஒன்று தான்.
அந்த வகையில், அமெரிக்காவின் Minnesota என்னும் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், இரண்டு கைகளில் மிக நீளமான விரல் நகங்களை வளர்த்து சாதனை ஒன்றை முறியடித்து, புதிய சாதனையை படைத்துள்ளார்.
டயானா ஆம்ஸ்ட்ராங் என்ற பெண்ணின் கைகளில் உள்ள பத்து விரல் நகங்களின் நீளம் என்பது 42 அடியும் 10.4 இன்ச்கள் ஆகும். இதில் டயானாவின் நீளமான நகம் என்பது அவரது வலது கட்டைவிரல் (4 அடி 6.7 இன்ச்) ஆகும்.
மேலும், டயானாவின் விரல் நகங்களின் ஒட்டுமொத்த நீளம் என்பது, ஒரு நிலையான மஞ்சள் நிறத்தில் உள்ள பள்ளி பேருந்தை விட நீளமானதாகும். மேலும், கடந்த 25 ஆண்டுகளாக டயானா தன்னுடைய நகத்தினை வளர்த்து வருகிறார். பலரும் உலக சாதனையை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இப்படி ஏதாவது செய்வார்கள். ஆனால், டயானாவின் சாதனைக்கு பின்னால், உருக்கமான சபதம் தான் உள்ளது.
இது குறித்து பேசும் டயானா ஆம்ஸ்ட்ராங், "16 வயதாக இருக்கும் போது, எனது மகள் கடந்த 1997 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் மட்டும் தான் எனக்கு நகங்களை வெட்டி, அதனை சிறப்பாக பாலிஷ் செய்து தருவார். அப்படி இருக்கையில், ஒரு நாள் இரவு தூக்கத்திலேயே ஆஸ்த்மா நோயால் அவர் உயிரிழந்து போனார். அதற்கு முந்தைய தினம் இரவு கூட எனது நகத்தை சுத்தம் செய்து அவர் பாலிஷ் செய்து கொடுத்தார். மகள் இறந்ததால் அதன் பிறகு, எனது நகத்தை வெட்டவே கூடாது என்று நான் சபதம் எடுத்தேன். என் வாழ்வின் மிகக் கொடுமையான நாள் அது. தொடர்ந்து எனது நகம் வளர்ந்து கொண்டிருந்த போது, எனது குழந்தைகள் நகத்தை வெட்ட வேண்டும் என கூறினார். ஆனால், முதலில் ஏன் நான் நகங்களை வளர்க்கிறேன் என்ற காரணத்தை அவர்களிடம் சொல்லவே இல்லை. அதன் பிறகு தான் ஒரு நாள், நான் எனது குழந்தைகளிடம் ஏன் நகம் வளர்க்கிறேன் என்பதை விளக்கினேன்" என டயானா உருக்கத்துடன் குறிப்பிட்டார்.
அதே போல, நீளமான நகம் என்பதால் கார் ஓட்டுவதற்கும் இல்ல சில இடங்களில் செல்வதற்கும் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார் டயானா. மேலும், இவரது நகங்களை பாலிஷ் செய்ய வேண்டும் என்றால், கிட்டத்தட்ட 15 முதல் 20 பாட்டில் நெயில் போலீஸ் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சாதனைக்காக இல்லாமல், மகள் இறந்ததன் சபதத்தால் நகம் வளர்த்தி சாதனை தொடர்பான செய்தி, பலரையும் உருக வைத்துள்ளது.