'தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை'... ‘தமிழக முதல்வரின் உத்தரவு குறித்து வெளியான தகவல்’... ‘திரையரங்குகளும் மூடல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 16, 2020 07:22 PM

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளித்து முதல்வர் பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் திரையரங்குகளும் மூடப்படுகிறது. மேலும் எவையெல்லாம் மூடப்படுகின்றன என்பதுகுறித்து விபரமான தகவல்களை பார்ப்போம்.

Tamil Nadu Government ordered the closure of Educational Institutions

1. மாநிலத்தில் செயல்படும் அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

2. அரசுத் தேர்வுகள் 10 முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் கல்லூரித் தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். இத்தேர்வுகள் முடிவடையும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளித் தொடர்ந்து இயங்கும்.

3. மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும்.

4. அங்கன்வாடி மையங்கள் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும். அங்கன்வாடி மையங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை குடும்பத்தினரிடம் அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் வழங்க வேண்டும்.

5. ஏற்கனவே திட்டமிட்டதை தவிர, திருமண மண்டபங்களில் புதிதாக நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது.

6. தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை பூங்காக்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியியல் பூங்காக்கள் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும்.

7. சுற்றுலாப் பயணிகள் தங்கும் இடம் அனைத்தும் மூடப்பட வேண்டும். கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

8. கொரோனா எதிரொலி காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா செல்ல மக்கள் திட்டமிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

9. திருமணங்களில் ஏராளமானோர் கூடுவதை தவிர்க்க வேண்டும். குறைந்த அளவே மக்கள் பங்கேற்க வேண்டும். திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் உள்ளிட்டவற்றில் அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுகோள்.

10. அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், பார்கள் (டாஸ்மாக் பார்கள் உட்பட) கேளிக்கை விடுதிகள் போன்றவை மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட வேண்டும். இவை அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. மேற்கூறியவற்றைத் தவிர பிற அவசிய, அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் மத்திய அரசும் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.