'தெருக்கோடியில் இருந்தவரை கோடீஸ்வரன் ஆக்கிய 'ஒரே ஒரு ''வாந்தி''... ஒரே நாளில் தலைகீழாக மாறிய வாழ்க்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்ஒரு வாந்தி, மனிதர் ஒருவரின் வாழ்க்கையை தலை கீழாக மாற்றி விட்டதா?. அப்படி ஒரு தலைப்பை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளதல்லவா?. அந்த விஷயத்தை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
தாய்லாந்தின் சோங்க்ளா மாகாணத்தை சேர்ந்த மீனவர் சளேரம்சய் மகபன் (Chalermchai Mahapan). 20 வயதான இவர், கடந்த ஆறாம் தேதி ஷமிலா கடற்கரையில் இருந்து தனது படகு மூலம் மீன் பிடித்து விட்டு திரும்பியுள்ளார்.
வானிலை மோசம் காரணமாக, அவர் வேகமாக கரையை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில், அங்கிருக்கும் கடற்கரை மணலில் ஏதோ வெள்ளைக் கல் ஒன்று கண்ணில் பட்டுள்ளது. இதனை முதலில் கண்ட அந்த மீனவர், ஏதோ சாதாரண வெள்ளை பாறையாக இருக்கும் என நினைத்துள்ளார். அதன் பிறகு, சற்று அருகே சென்று பார்த்த போது ஏதோ மதிப்புள்ள பொருளாக இருக்கலாம் என தோன்றியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த பொருளை எடுத்துக் கொண்டு இளைஞர் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அதன்பிறகு, தனது ஊரார் மத்தியில் அது என்ன பொருள் என கேட்ட போது, அது திமிங்கலத்தின் வாந்தியாக இருக்கலாம் என அவர்கள் கூறியுள்ளனர். அதாவது, கடலிலுள்ள அரிய வகை மீன்களை திமிங்கலம் உண்ட பின், அது சரியாக செமிக்காமல் திமிங்கலத்தின் குடல் பகுதியிலேயே தங்கி விடும்.
இது ஒரு பந்து போல உருவாகி, நீண்ட நாட்களுக்கு பிறகு இதனை திமிங்கலம் வாந்தியாக வெளியேற்றும். இந்த பொருளை விஞ்ஞானிகள் 'Ambergris' என அழைப்பர். வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல பொருட்களை உருவாக்க, இந்த திமிங்கலத்தின் வாந்தி தேவைப்படுவதால் இதன் விலை மதிப்பு மிகவும் அதிகமாகும். முதலில் இந்த வாந்தி அதிக துர்நாற்றம் எடுக்கும் நிலையில், சில தினங்களுக்கு பிறகு சிறந்த வாசனையை கொடுக்கும்.
அந்த பொருள் 'Ambergris' தான் என்பதை அறிய வேண்டும் என்றால், அதனைத் தீயில் வைத்து உருக்கிய பின் வரும் வாசனையை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். மேலும், இது Ambergris தான் என்பதை உறுதி செய்ய அந்த வாந்தியின் மாதிரிகளை ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த திமிங்கல வாந்தியை பெற்ற இளைஞர், தன்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதும் நிலையில், தான் அதனைத் தற்போதைக்கு விற்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். அந்த இளைஞருக்கு '7' கிலோ Ambergris கிடைத்துள்ள நிலையில், இந்திய விலை மதிப்பில் ஒரு கிலோவிற்கு 20 லட்சம் வரை விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.