தாய்லாந்தில் 'அவசர நிலை' பிரகடனம்!.. ஊடகங்களுக்கு தடை... கொந்தளிக்கும் பொதுமக்கள்!.. உச்சகட்ட கோபத்தில் மன்னர்!.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > உலகம்தாய்லாந்தில் அவசர நிலை பிரகடனம் செய்யபட்டு உள்ளது. ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாய்லாந்தின் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. நேற்றுதான் தாய்லாந்து மன்னரும், ராணியும் உலாவரும்போது மக்கள் ஆரவாரம் செய்து அவர்களை வரவேற்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில், இன்று அதற்கு நேர்மாறாக, மக்கள் மன்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஒரே நாளில் இப்படி ஒரு மாற்றம் எப்படி ஏற்பட்டது? தாய்லாந்தின் உண்மை நிலவரம் என்ன? அங்கே என்னதான் நடக்கிறது? தாய்லாந்து மன்னரான மஹா வஜிரலோங்கார்ன் பெரும்பாலான நேரத்தை ஜெர்மனியில் இளம்பெண்களுடன் செலவிடுவதுண்டு. எப்போதாவது தான் தாய்நாட்டுக்கே திரும்பும் வஜிரலோங்கார்ன், நேற்று தனது தந்தையின் நினைவு நாளை அனுசரிப்பதற்காக ஜெர்மனியிலிருந்து தாய்லாந்து திரும்பியிருந்தார்.
அப்போது மக்கள் அவரை தாழ விழுந்து வணங்கும் படங்களும், அவருக்கு பரிசளிக்கும் படங்களும், மன்னரும் ராணியும் மக்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கையசைக்கும் படங்களும் வெளியாகியுள்ளன. ஆனால், தாய்லாந்தின் உண்மை நிலைமை வேறு. அங்கு உல்லாசப் பேர்வழியான மன்னர் வஜிரலோங்கார்னுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.
நேற்று மன்னரை வரவேற்கக்கூடிய கூட்டத்தை விட பல மடங்கு அதிக மக்கள் கூடி அவருக்கு எதிராக இன்று போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். மன்னரின் ஆட்சியில் மறுசீரமைப்புகள் கொண்டு வரவேண்டும்; பிரதமர், பதவி விலகவேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். தாய்லாந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது புதிய பேரணியைத் திட்டமிட்டு உள்ளனர்.
இது நீண்ட நாட்களாகவே நடந்துவந்தாலும், நேற்று மன்னர் அபூர்வமாக நாடு திரும்பிய நிலையில், அவர் பவனி வரும் காரையே மக்கள் மறிக்க முயன்றது மன்னருக்கு கோபத்தை ஏற்படுத்தியதோ என்னவோ, காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக அவசர நிலையை பிரகடனம் செய்துவிட்டார்.
மக்கள் ஐந்துபேர் அல்லது அதற்கு மேல் யாரும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய பாதுகாப்புக்கு ஊறு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட அனைத்து வகை ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போராட்டங்களை முன்னின்று நடத்திய தலைவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கிடையில், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திரைப்படம் ஒன்றில் காட்டப்படும் மூன்று விரல் சல்யூட் தாய்லாந்தில் பிரபலமாகியுள்ளது.
மன்னருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் இந்த மூன்று விரல் சல்யூட் செய்கிறார்கள்.
இந்நிலையில்தான், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு மக்கள் கூட்டம் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அடுத்து நடக்கும் நிகழ்வுகள் ஊடகங்களில் வெளியாகுமா என்பதும் தெரியாத ஒரு சூழல் தாய்லாந்தில் நிலவுகிறது.