கொரோனாவுக்கு பலியான முதல் ‘இளவரசி’! அரச குடும்பத்திற்குள் புகுந்த ‘ஆட்கொல்லி’ நோயால் நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளவரசி மரியா தெரேசா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு அமெரிக்கா, சீனா, இத்தாலி நாடுகளில் மட்டுமல்லாது இந்தியா உட்பட பல நாடுகளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
உலக நாடுகள் முழுவதும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் ஏழை, பணக்கார நாடுகள் என்கிற வித்தியாசம் இல்லாமல் அனைத்து நாடுகளிலும் தனது கோரப்பிடியால் கொரோனா பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆளும் அதிகாரம் படைத்தவர்கள் என்று பார்க்காமல் இந்த கொரோனா அனைவரையும் தாக்கி வருகிறது என்பதற்கு உதாரணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி ட்ரூடோவுக்கும், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரேசா இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்திருந்த சமயத்தில் நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் அரச குடும்பத்தை சேர்ந்த முதல் உயிரிழப்பாக மரியா தெரேசாவின் உயிரிழப்பு கருதப்படுகிறது. இவருக்கு வயது 86. ஸ்பெயினை பொறுத்தவரை 73 ஆயிரத்து 235 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதும், இவர்களில் 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.