"அடேய் கொரோனா உன்னால ஒரு நன்மைடா?..." "ஃபேக்டரி எல்லாம் லீவு விட்டதால..." "காற்று சுத்தமாயிடுச்சு..."
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பீதியால் உலகின் முக்கிய நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடித்து வருவதால் ஐரோப்பா முழுவதும் காற்று மாசு கணிசமாக குறைந்துள்ளதை செயற்கைக் கோள் புகைப்படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

உலகளவில் கொரோனா வைரஸிற்கு அதிக உயிர்களை பலிகொடுத்துள்ளது ஐரோப்பா கண்டம். இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த எதிர்மறை செய்திகளுக்கு நடுவே, ஒரே ஒரு நல்ல செய்தியாக, ஐரோப்பா முழுவதும் காற்று மாசு கணிசமாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் உலகெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. தொழிற்சாலைகள் அனைத்தும் இயங்கவில்லை. இதுபோன்ற காரணங்களால், காற்று மாசுபாடு கணிசமான சரிவை சந்தித்துள்ளது.
பாரிஸ், மாட்ரிட் உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய நகரங்களில் நைட்ரஜன் டை ஆக்சைடால் ஏற்படும் காற்று மாசு 40 சதவீதம் குறைந்துள்ளதை, சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன. கோப்பர்நிக்கஸ் சென்டினல் -5 பி செயற்கைக்கோள், மார்ச் 14 முதல் 25 வரையிலான காலகட்டத்தில் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் நைட்ரஜன் டை ஆக்சைடு செறிவுகளைக் காட்டும், மூன்று கலப்பு படங்களை எடுத்துள்ளது. இதனை ஐரோப்பிய விண்வெளித் துறை 2019-ம் ஆண்டுடன் ஒப்பிட்டு வெளியிட்டுள்ளது. இதில் தான் இத்தகவல் தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய கண்டத்தில் காற்று மாசுபாடு காரணமாக மோசமான சுகாதார சீர்கேடுகளை அனுபவித்து வந்தமக்கள் இதன் மூலம் நல்ல பருவநிலை மாற்றங்களை பெறக் கூடும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
