மனித மூளையை உண்ணும் அமீபா.. சொந்த ஊருக்கு திரும்பியவருக்கு கொஞ்ச நாள்ல நேர்ந்த துயரம்.. அறிகுறிகள் என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்தென் கொரியாவை சேர்ந்த ஒருவருக்கு மூளையை உண்ணும் அமீபா தாக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதனால் உலக நாடுகள் பலவும் மீண்டும் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தென் கொரியாவில் மனித மூளையை உண்ணும் அமீபா பாதிப்பு ஒருவருக்கு இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு உறுதி செய்திருக்கிறது.
50 வயதான அந்நபர் நான்கு மாதங்களுக்கு முன்னர் தாய்லாந்துக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில், டிசம்பர் 10 ஆம் தேதி தென் கொரியாவுக்கு திரும்பியிருக்கிறார் அவர். அதன் பிறகு அவருக்கு மூளை உண்ணும் அமீபா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
இந்த அமீபாவை நெக்லேரியா ஃபோலேரி (Naegleria fowleri) என்றும் அழைக்கிறார்கள். பொதுவாக வெப்பமான நீர் நிலைகளில் இந்த அமீபா காணப்படும் என்கிறார்கள் நிபுணர்கள். இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில்,"நெக்லேரியா ஓர் ஒற்றை செல் உயிரினம். இந்த அமீபா ஏரிகள், ஆறுகளில் காணப்படும். அமீபாவில் அனைத்தும் கொல்லும் தன்மையுடன் இருக்காது. ஆனால் நெக்லேரியா ஃபோலேரி மனிதர்களின் மூக்கு வழியாக நுழைந்து, மூளைக்குச் சென்று திசுக்களையும், நரம்புகளையும் தாக்கி சேதப்படுத்தி, மூளையில் `Primary amebic meningoencephalitis' தொற்றை ஏற்படுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், வாந்தி, தெளிவற்ற பேச்சு, கழுத்துப் பிடிப்பு ஆகிய அறிகுறிகள் தென்படலாம் எனவும் நோய் தீவிரம் அடையும்போது வலிப்பு அல்லது கோமா கூட ஏற்படலாம் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவில் 1962 முதல் 2021 வரை இந்நோய் பாதிக்கப்பட்ட 154 நபர்களில், வெறும் 4 பேர் மட்டுமே உயிர் பிழைத்திருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.
Also Read | பீல்டிங் நின்னது ஒரு குத்தமா.. வீரரை பதம் பார்த்த ஸ்பைடர் கேமரா.. கிரவுண்ட்ல நடந்த சம்பவம்.. வீடியோ..!