'இன்னும்' முடியல... 'அதிரடி' நடவடிக்கைகளால் கொரோனாவை 'வென்றும்'... மக்களை 'அதிர்ச்சியில்' ஆழ்த்தியுள்ள 'எச்சரிக்கை'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | May 11, 2020 10:33 AM

இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் வெடிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென தென்கொரிய அதிபர் எச்சரித்துள்ளார்.

South Korea Warns Of Second Coronavirus Wave As Cases Rebound

கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகளும் செய்வதறியாது நிலைகுலைந்து போய் முடங்கியுள்ள நிலையில், முதல்முதலாக கொரோனா பரவத் தொடங்கிய சீனா மற்றும் அடுத்ததாக பாதிக்கப்பட்ட தென்கொரியா ஆகிய நாடுகள் தற்போது வைரஸ் பாதிப்பை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளன. பிப்ரவரியில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 2வது இடத்திலிருந்த தென்கொரியாவில் தற்போது 10000ஐக் கடந்த பாதிப்புடன் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு தென்கொரியாவின் துரிதமான மற்றும் கடுமையான நடவடிக்கைகளே எனக் கூறப்படும் நிலையில், அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு தற்போது மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளபோதும், கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தனி நபர் இடைவெளியுடனேயே மக்கள் வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் வெடிக்குமென அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று மக்கள் மத்தியில் உரையாற்றிய அதிபர் மூன் ஜே இன், "தென்கொரியாவில் கடந்த சில வாரங்களாக எந்த புதிய பாதிப்பும் இல்லாததால் நாட்டில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் சமீபமாக  சியோலின் இட்டாவேன் மாவட்டத்தில் சில புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதன் மூலம் கொரோனா வைரஸ் எப்போது, எங்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூற முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை வருங்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் உருவாகலாம்.

குறிப்பாக கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் வைரஸ் மிக வேகமாகப் பரவுவதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு மீண்டும் பெரிய அளவில் வெடிக்க வாய்ப்புள்ளது. அதனால் நாம் எந்த பாதுகாப்பு நடவடிக்கையையும் குறைக்கக்கூடாது. பயமின்றி முறையான வழிகாட்டுதல்களைக் கடைபிடித்தாலே வைரஸ் பரவலை நிச்சயமாக தடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார். இதுவரை தென்கொரியாவில் 10,874 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 256 பேர் உயிரிழந்துள்ளனர். 9,610 பேர் குணமடைந்துள்ளனர்.