தண்டவாளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்… அசுர வேகத்தில் வந்த ரயில்… பைலட் உயிர் தப்பித்த திக் திக் கணங்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் குட்டி ப்ளேன் ஒன்று பறக்கும் போதே விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்தது. உடனடியாக சுற்றியிருந்த மக்கள் துரித கதியில் செயல்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸில் ஞாயிற்றுக் கிழமையான நேற்று ஒரு சிறிய விமானம், ரயில் தண்டவாளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்து விபத்துக்கு உள்ளானது. லாஸ் எஞ்சலிஸுக்கு அருகில் உள்ள ஒயிட்மேன் விமான நிலையத்துக்கு பக்கத்தில் இருக்கும் பொகைமா என்னும் இடத்தில் தான் இந்த விபத்து நடந்துள்ளது.
விமானத்தை ஓட்டி வந்த பைலட், விபத்து நடந்த பின்னர் கடும் காயங்களுடன் அதன் உள்ளேயே சிக்கியுள்ளார். அவரால் அதிலிருந்து வெளி வர முடியாமல் தவித்துள்ளார். அந்த நேரத்தில் அங்கு வந்த உள்ளூர் காவல் துறையினர், பைலட்டின் நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
போலீஸ், சம்பவ இடத்துக்கு வந்த அதே நேரத்தில் தண்டவாளத்தில் மின்னல் வேகத்தில் ஒரு ரயில் வந்து கொண்டிருந்தது. ரயில் கிட்டே வர வர, காவல் துறையினர் விமானத்தில் ரத்த வெள்ளத்தில் மாட்டிக் கொண்டிருந்த பைலட்டைக் காப்பாற்ற கடும் முயற்சி எடுத்தனர்.
ஒரு கட்டத்தில் பைலட்டை விமானத்திலிருந்து விடுவித்து, தர தரவென அவசர அவசரமாக இழுத்து வந்தது போலீஸ். அப்படி போலீஸ் பைலட்டை மீட்ட அடுத்த ஒரு சில கணங்களில் மின்னல் வேகத்தில் வந்த ரயில், விமானத்தில் மோதி அதை சுக்குநூறாக தெறிக்கச் செய்தது. இந்த திக் திக் காட்சிகள் அனைத்தும் வீடியோவாக படம் பிடிக்கப்பட்டு தற்போது உலக அளவில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பைலட், தற்போது தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மற்ற செய்திகள்
