250 மயக்க மாத்திரை.. 7 செல்போன்கள்.. ‘சென்னை’ சென்ட்ரலில் சிக்கிய நபர்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பயணிகளுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஓடும் ரயிலில் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரு நாட்களுக்கு முன்பு டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் யோகி மற்றும் அவருடைய சகோதரர் லோகேஷ் குமார் யோகி ஆகிய இருவரும் பயணம் செய்துள்ளனர். அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த மற்றொரு பயணி இவர்கள் இருவரிடமும் சகஜமாக பேசி வந்துள்ளார்.
ரயில் நெல்லூர் அருகே வந்ததும் அந்த நபர் இவர்கள் இருவருக்கும் குளிர்பானம் குடிக்க கொடுத்துள்ளார். அதை குடித்த இருவரும் சற்று நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளனர். பின்னர் இருவரும் நாக்பூர் அருகே மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்த்தபோது பணம் மற்றும் செல்போன்கள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே இதுதொடர்பாக நாக்பூர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து நாக்பூர் ரயில்வே போலீசார் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் ரோகித் குமார் தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்தனர்.
இதனிடையே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி செல்ல கூடிய ரயிலில் பயணிக்க காத்துக் கொண்டிருந்துள்ளார். இதைக் கவனித்த போலீசார் அவரை உடனே கைது செய்தனர். இதனை அடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பதும், இவர் ரயில் பயணிகளிடம் சகஜமாக பேசுவது போல் நடித்து மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரிடமிருந்த 250 மயக்கம் மாத்திரைகள், 7 செல்போன்கள் மற்றும் 4 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோன்று முன்பின் அறிமுகமில்லாத நபர்கள் கொடுக்கும் உணவுப் பொருட்களையோ, குளிர்பானங்களையோ பயணிகள் வாங்கி சாப்பிடக்கூடாது என ரயில்வே போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.