ஸ்டாப்பில் இறங்குவதற்குள் கிளம்பிய பேருந்து.. அச்சத்தில் ஓடும் பேருந்திலிருந்து குதித்த மாணவி பரிதாபமாக உயிரிழப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒசூரின் சினகிரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நவ்யா ஸ்ரீ என்னும் மாணவி ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்க முயற்சித்த போது, துரதிருஷ்டவசமாக பேருந்தின் பின்பக்க டயரில் சிக்கி உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கீழே குதித்த மாணவி
ஓசூர் அருகே கெலமங்கலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவந்த நவ்யாஸ்ரீ, நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.
நவ்யாவின் சொந்த ஊரான சினகிரிப்பள்ளியில் பேருந்து நின்ற போது, கூட்ட நெரிசல் காரணமாக மாணவியால் கீழே இறங்க முடியாமல் போயிருக்கிறது. அதற்குள் பேருந்து நகர ஆரம்பிக்கவே, கீழே இறங்கவேண்டிய அவசரத்தில் ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்திருக்கிறார் நவ்யாஸ்ரீ.
அப்போது பேருந்தின் பின்பக்க டயர்கள் நவ்யாவின் கை மற்றும் கால்களில் ஏறியதால் படுகாயமடைந்த அவரை அதே பேருந்தில் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு தூக்கிச்சென்றிருக்கிறார்கள் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.
மேல்சிகிச்சை
நவ்யாவின் உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்ததால் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார் நவ்யா.
இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி நேற்று நள்ளிரவு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்குப் பதிவு
மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பேருந்தின் ஓட்டுனர் வெங்கடேசன் மற்றும் நடத்துனர் குமார் ஆகியோர் மீது உத்தமபள்ளி காவல்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.