பைக் விபத்தில் சிக்கிய ‘பிரபல’ கிரிக்கெட் வீரர்.. காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே (Shane Warne), 90-களில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக வலம் வந்தார். தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் குடும்பத்துடன் சிட்னியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று தனது மகன் ஜாக்சனுடன், ஷேன் வார்னே பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மற்றொரு வாகனம் மோதியதில் ஷேன் வார்னே நிலை தடுமாறி பைக்குடன் கீழே விழுந்துள்ளார். சுமார் 15 மீட்டர் சாலையில் பைக் வழுக்கிக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ஷேன் வார்னே மற்றும் அவரது மகன் ஜாக்சன் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனாலும் உடம்பில் கடும் வலி உள்ளதால், உடலில் ஏதேனும் உபாதைகள் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய ஷேன் வார்னே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தி ஏஜ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஷேன் வார்னே, ‘எனக்கு அடிபட்டு சிறிது காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் மிகவும் வேதனையாக உள்ளது’ என கூறியுள்ளார். வரும் டிசம்பர் 8-ஆம் தேதி ஹப்பாவில் தொடங்க உள்ள ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு வர்ணனை செய்யும் பணிக்காக ஷேன் வார்னே செல்ல இருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதால், முதல் போட்டிக்கு வர்ணனை செய்ய அவர் செல்வது சந்தேகமாகியுள்ளது.

மற்ற செய்திகள்
