‘சாலையில் திடீரென தரையிறங்கிய’... ‘சிறிய விமானத்தால் பரபரப்பு’... ‘பதறிய வாகன ஓட்டிகள்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Aug 02, 2019 12:04 PM

அமெரிக்காவில் நெரிசல் மிகுந்த போக்குவரத்து சாலையில், சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pilot makes emergency landing on highway in america

சியாட்டிலின் புறநகர் தேசிய நெடுஞ்சாலையில், வாஷிங்டன் மகாண காவல் அதிகாரி கிளிண்ட் தாம்ஸன் என்பவர், கடந்த வியாழக்கிழமை காலை, காவல் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது தனது காருக்கு மேலே, சிறிய ரக விமானம் ஒன்று குறைந்த உயரத்தில் பறந்து சென்றுக்கொண்டிருந்ததைக் கண்டார். அலுவலக நேரம் என்பதால் அந்த சாலையில் நெரிசல் மிகுந்திருந்தது. சிறிய ரக விமானம் சாலையில் தரையிறங்கப்போவதை உணர்ந்த காவல் அதிகாரி, உடனடியாக, அவசர விளக்கை போட்டு, டிராஃபிக்கை நிறுத்தி, சிறிய ரக விமானம் தரையிறங்க உதவி புரிந்தார்.

இதையடுத்து ஒரு ஆள் மட்டுமே பயணிக்ககூடிய கே.ஆர் 2 ரக அந்த விமானம், வாகனங்கள் சென்று கொண்டிருந்த நெரிசல் மிகுந்த சாலையில் தரையிறங்கியது. இதனால் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். கார் ஓட்டிக் கொண்டிருந்த டென்னிஸ் என்பவர், தனது காரை சிறிய ரக விமானத்தின் இறக்கைகள் உரசிச் செல்வதுபோல் சென்றதால், பதறிப்போனதாக தெரிவித்துள்ளார். தரையிறங்கிய சிறிய ரக விமானத்திலிருந்து வெளிவந்த டேவிட் அக்காம் என்ற விமானியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதில், விமானத்தின் எரிபொருள் அமைப்பில் ஏற்பட்ட கோளாறால், அதனை அவசர அவசரமாக தரையிறக்கியது தெரிய வந்துள்ளது. காவல் அதிகாரியின் உதவியால், தான் தப்பி பிழைத்தாக விமானி டேவிட் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவங்கள் அனைத்தும் காவல் அதிகாரியான கிளிண்ட் தாம்ஸனின் காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவானது தற்போது வெளியாகியுள்ளது.

Tags : #AMERICA #KR2 #FLIGHT #SEATTLE #HIGHWAY