மகளின் வாரிசை... தனது வயிற்றில் சுமக்கும் தாய்!.. டெலிவரிக்கு தயாராகும் சிசுவின் பாட்டி!.. இப்படி ஒரு அம்மா!?
முகப்பு > செய்திகள் > உலகம்"எங்கள் குழந்தையை இந்த உலகத்துக்குக் கொண்டுவர என்னால் என்னவெல்லாம் செய்ய முடிந்ததோ, அனைத்தையும் செய்திருக்கிறோம்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் பிரென்னா லாக்வுட் மற்றும் அவரது தாயார் ஜூலி லவிங். பிரென்னா லாக்வுட் மற்றும் அவரது கணவர் ஆரோனின் குழந்தையை வயிற்றில் சுமந்து வருகிறார் லாக்வுட்டின் தாயாரான ஜூலி லவிங். தனது மகளின் குழந்தைக்கே வாடகைத் தாயாகியிருக்கிறார். இவருக்கு நவம்பர் 12-ம் தேதி குழந்தை பிறக்கவிருக்கிறது.
லாக்வுட் ஒரு பல் மருத்துவர், அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்தவர். இவருக்கும் இவரது கணவருக்கும் 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அந்த நேரத்தில் லாக்வுட்டின் தாத்தா உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அதனால், தனது குழந்தையுடன் தாத்தாவைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பிய லாக்வுட் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். ஆனால், ஒரு வருடம் ஆகியும் அவருக்குக் கருத்தரிக்கவில்லை. அதன்பிறகு அவர் கருத்தரிப்பு மையத்தில் பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை பெறத் தொடங்கினார்.
இரண்டு வருடத் தொடர் சிகிச்சையில் அவருக்குப் பலமுறை கருத்தரித்தும், தங்கவில்லை. தொடர்ந்து கருச்சிதைவு ஏற்பட்டது. இதில், ஒருமுறை இரட்டைக் குழந்தைகளுடன் உருவான கருகூட சிதைந்துவிட்டது. அதன்பிறகு லாக்வுட்டின் மருத்துவர் வாடகைத் தாய் குறித்துப் பேசியுள்ளார். ஏனெனில், லாக்வுட்டின் கருமுட்டை ஆரோக்கியமாக இருக்கிறது. ஆனால், அவரது கர்ப்பப்பை பலவீனமாக இருப்பதால்தான் கரு தங்கவில்லை; உடனே சிதைந்துவிடுகிறது என்று கூறியிருக்கிறார்.
"எங்கள் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என் அம்மாதான். எனது உடலை விடவும் என் அம்மாவின் உடல் என் குழந்தைக்குப் பொருத்தமாக இருக்கும் என்று உணர்ந்தேன். என் அம்மா பாட்டியாக விரும்பினார்கள். நானும் அம்மாவாக விரும்பினேன். எங்களது விருப்பத்தை நிறைவேற்ற, இந்த வயதிலும் அவரால் முடிந்ததைச் செய்திருக்கிறார். குழந்தை பெற முடியாமல் இருந்த சூழல்தான் எனது வாழ்நாளில் மிகவும் மோசமானது. எதிர்காலம் குறித்துத் திட்டமிடலுடன் பயணித்தபோது ஏற்பட்ட இந்தப் பிரச்னையால் என்னால் எதிலுமே கவனம் செலுத்த முடியவில்லை. எனது கனவிலிருந்து என்னை வெகுதூரம் இழுத்துச்சென்றுவிட்டது இந்தப் பிரச்னை" என்று வருத்தத்துடன் கூறுகிறார் லாக்வுட்.
குழந்தை இல்லாமல் இருப்பதை விரும்பாத லாக்வுட் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். அப்போது, மருத்துவர் பிரைன் கப்லான், "வாடகைத்தாய் முறையில் குழந்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டால் செலவு குறைவு. ஆனால், ஏஜென்சி மூலம் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால் ஒரு லட்சம் டாலர் வரை செலவாகும்" என்றும் தெரிவித்தார்.
மருத்துவர் கூறிய ஆலோசனைப்படி லாக்வுட் வாடகைத் தாயைத் தேடத்தொடங்கினார். ஆனால், 51 வயதான அவரது அம்மாவை வாடகைத் தாயாகக் கற்பனை செய்து பார்க்கவில்லை. இந்த நிலையில் தானாகவே லாக்வுட்டின் தாய் ஜூலி லவிங் வாடகைத் தாயாகத் தனது மகளின் கருவையே சுமக்க முன்வந்தார்.
51 வயதான ஜூலி கூறுகையில், "நான் 19 மாரத்தான் போட்டிகளில் ஓடியிருக்கிறேன். டிரையத்லான் போட்டியிலும் பங்குபெற்றிருக்கிறேன். இந்த வயதிலும் இன்னொரு குழந்தையைச் சுமக்கும் நிலையில், தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவே உணர்கிறேன். இரண்டு குழந்தைகளை வெற்றிகரமாகப் பெற்றெடுத்தவள் நான் என்று என்கிறார் நம்பிக்கையுடன்.
ஜூலி லவிங்கின் யோசனை மருத்துவரிடமுடம் தெரிவிக்கப்பட்டது. முதல்முறை ஜூலி லிவிங் மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவர் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறார். மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்து பரிசோதனைகளில் ஜூலி தேர்ச்சி பெற்றிருக்கிறார். அதன் பிறகு, ஆய்வகத்தில் லாக்வுட்டின் கருமுட்டை-ஆரோனின் விந்தணுவை ஒன்று சேர்த்து உருவான கருமுட்டையை வெற்றிகரமாக, செயற்கை முறையில் ஜூலி லிவிங்கின் கர்ப்பப்பைக்குள் செலுத்தினார்கள்.
முதல் முயற்சியிலேயே கருமுட்டை ஜூலியின் கர்ப்பப்பையில் கரு தங்கி வளரத்தொடங்கியது. ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியடைந்தனர். லாக்வுட்டின் குழந்தை பாட்டியின் வயிற்றுக்குள் வளரத்தொடங்கியது.
கொரோனா, நோய் தொற்றால் உலகமே, முடங்கிக்கிடக்கும் சூழலில் தற்போது குழந்தையை வெற்றிகரமாகச் சுமந்து வருகிறார் ஜூலி. "குழந்தை வளர்ந்த பிறகு இந்த உண்மையைக் கட்டாயம் அவள் புரிந்துகொள்ளும் விதத்தில் எடுத்து சொல்வோம்" என்று நெகிழ்கிறார்.
ஜூலிக்கு 27 வயதில் மகன் ஒருவரும் உண்டு.