"10 வருஷ வித்தியாசத்துல இன்னொரு இரட்டைக் குழந்தை!"... "ஆனா அதே கருமுட்டை!".. உறையவைக்கும் நிகழ்வு!
முகப்பு > செய்திகள் > உலகம்ஒரே தாயிடம் உருவான இரட்டையர்களில் ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்குமான இடைவெளி சில நிமிடங்கள் இருக்கலாம். ஆனால் ஒரே கருவில் உருவான ஒரு குழந்தை பிறந்து பல வருடங்கள் கழித்து மற்றொரு குழந்தை பிறந்துள்ள சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.
சீனாவை சேர்ந்த பெண்மணி வாங் என்பவர் இறுதியாக, தனக்கு குழந்தை உருவாக வேண்டி, சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார். அதன்படி 2010ஆம் ஆண்டு லூ லூ என்கிற செல்ல பெயர் கொண்ட ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் பத்தாண்டுகள் கழித்து, லூ லூவுக்கு ஒரு தம்பியோ தங்கையோ வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் வாங்.
இதனால் மீண்டும் லூ லூ பிறந்த அதே மருத்துவமனைக்கு சென்ற இந்த தம்பதியருக்கு அங்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், லூ லூ உருவான அதே ஆண்டு, அதே நேரத்தில் அதே உயிரணுக்களை இணைத்து மேலும் சில கருக்களை உருவாக்கி அந்த மருத்துவமனையில் சேமித்து வைத்திருந்திருக்கிறார்கள். இதனையடுத்து இந்த தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டதும், அதே கரு முட்டையிலிருந்து இன்னொரு கருவை எடுத்து அதை வாங்கின் கருப்பையில் செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, இந்த தம்பதியர் இன்னொரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். அந்த குழந்தைக்கு தோங் தோங் என்று பெயர் வைத்துள்ளனர். ஆங்கிலத்தில் இதன் பொருள், “இரண்டாவது குழந்தை முதல் குழந்தையை போலவே இருக்கிறார்” என்பதுதான். இதனால் தோங் தோங்கும், லூலூவும் பத்தாண்டுகள் வித்தியாசத்தில் பிறந்த இரட்டையர்கள் என்கிறார்கள் அந்த மருத்துவமனை மருத்துவர்கள்.