'கேரளாவில் குணமான வெளிநாட்டினர்'...ஏன் 'எச்.ஐ.வி' மருந்து கொடுக்கப்பட்டது?... பின்னணி தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Apr 11, 2020 12:23 PM

கேரளாவில் கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்று வந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நான்கு பேர் முழுவதுமாக குணமடைந்தனர். அதில் ஒருவருக்கு எச்.ஐ.வி-க்கான மருந்து வழங்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

Infected foreigners in Kerala recover from COVID-19

கேரளா மாநிலம் கொச்சியில் தங்கியிருந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஸ்டீவன் ஹான்காக், அவரது மனைவி அன்னே வில்லியம், மற்றும் ஜேனட் லே, ஜேன் எலிசபெத் ஜாக்சன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொச்சியில் இருக்கும் ஆஸ்டர் மெட்சிட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில்  அவர்கள் 4 பேரும் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்ததால், கடந்த வியாழக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

அதேபோன்று திருவனந்தபுரம் மற்றும் எர்ணகுளம் மருத்துவமனைகளில், இத்தாலிநாட்டைச் சேர்ந்த ராபர்டோ டோனோசோ மற்றும் இங்கிலாந்து நாட்டவர்களான லான்சன் எலிசபெத் லான்ஸ் மற்றும் பிரையன் நீல் ஆகியோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்திருந்தனர். இதில் பிரையன் நீல் கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி விமானநிலையத்தில் நிறுத்தப்பட்டு, பரிசோதிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் கொச்சியில் இருக்கும் கலாமாசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவருக்கு மட்டும் சிறப்பு அனுமதி பெற்ற பின்னர்,  எச்.ஐ.வி-க்கான மருந்து வழங்கப்பட்டது. இது அவரின் உயிரை காப்பாற்றுவதற்கு பெரும் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே வெளிநாட்டவர்கள் குணமடைந்த போதும் அவர்கள் அனைவரும், கொச்சியில் உள்ள போல்கட்டி ஹோட்டலில் வைத்து கண்காணிக்கப்படுவார்கள். கண்காணிப்புக் காலத்திற்குப் பிறகு நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.