22 கோடி ஆண்டு பழமையான ‘டைனோசர்’ கால்தடத்தை கண்டுபிடித்த 4 வயது குழந்தை.. பெற்றோருடன் வாக்கிங் போகும்போது நடந்த ஆச்சரியம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித்தடம் 4 வயது குழந்தையால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள பெண்ட்ரிக்ஸ் கடற்கரையில் லிலி வில்டர் என்கிற 4 வயது குழந்தை, தனது தந்தை ரிச்சர்ட், தாய் சாலி உடன் நடந்து சென்றுள்ளார். அப்போது கடற்கரையில் பெரிய கால்தடம் ஒன்று இருப்பதைப் பார்த்த அந்த குழந்தை, உடனே தனது பெற்றோரிடம் கூறியுள்ளது. இதனை அடுத்து தொல்லியல் ஆய்வாளர்களிடம் குழந்தையின் பெற்றோர் தகவல் தெரிவிக்கவே, நிபுணர்கள் அந்த காலடித்தடத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது சுமார் 22 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் கால்தடம் இது என்பது தெரியவந்துள்ளது. இந்த கால்தடம் இத்தனை ஆண்டுகளாக ஈர மண்ணால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதாகவும், டைனோசர்கள் எப்படி நடக்கும் என்பதை நிறுவ இந்த காலடித்தடம் உதவும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வேல்ஸில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்தின் நிபுணர் சிண்டி ஹோவெல்ஸ் கூறுகையில், ‘இந்த கால்தடம் 10 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. அதனால் டைனோசரின் உயரம் 75 சென்டிமீட்டராக இருக்கலாம். ஆனால் எந்த வகையான டைனோசர் என சரியாக கூறமுடியவில்லை. இதுவரை இந்த கடற்கரையில் கிடைத்த கால்தடங்களிலேயே இதுதான் மிகவும் சிறந்தது’ என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
