'கேலி, கிண்டலால் விபத்து எனக் கூறிய குடும்பத்தினர்'... 'அவர்கள் மீதே குற்றச்சாட்டுகளை அடுக்கும் போலீசார்'... 'இளம்பெண் மரணத்தில் புது திருப்பம்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தர பிரதேசத்தில் இளம்பெண் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் தற்போது புது திருப்பம் ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் புலாந்த்ஷார் பகுதியை சேர்ந்த சுதீக்ஷா (20) என்ற இளம்பெண் இரு நாட்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது 2 நபர்கள் கேலி கிண்டல் செய்து துரத்தி வந்ததால், விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததாக அவருடைய மாமா போலீசாரிடம் தெரிவித்திருந்தார். இந்த சம்பவத்திற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவந்து நிலையில் தற்போது இந்த வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த சுதீக்ஷா அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் படித்துவந்த நிலையில், சொந்த ஊருக்கு வந்திருந்தபோதே விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், அம்மாநில போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். இதுகுறித்துப் பேசியுள்ள போலீசார், "சம்பவத்தன்று சாலையில் 2 நபர்கள் கேலி செய்து துரத்தியதாக உயிரிழந்த பெண்ணின் மாமா கூறியுள்ளார். ஆனால் அப்படி நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. விபத்தின்போது, சுதீக்ஷா அவருடைய மாமா மற்றும் உறவினர் மகன் ஒருவருடனும் இருசக்கர வாகனத்தில் சென்றதாகவும், அவருடைய மாமா தான் வண்டியை ஓட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ள நிலையில், உறவினர் மகன்தான் வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். விபத்து நடந்த நேரத்தில் அந்தப் பெண்ணின் மாமா தாத்ரியில் இருந்ததும், அதன்பிறகு 2 மணிநேரம் கழித்தே சம்பவ இடத்திற்கு வந்ததும் அவருடைய போன் லொக்கேஷனை வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 வருடங்களுக்கு முன் சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த சுதீக்ஷா கல்லூரியிலும் உதவித்தொகை பெற்றுள்ளார். அவருக்கு கிடைத்துவரும் உதவித்தொகை மிகவும் அதிகம் எனவும், அதனால் அவருடைய இன்ஸ்யூரன்ஸ் பணத்திற்கு குறிவைக்கின்றனர்" எனவும் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.