'ரொம்ப வருஷமா குழந்தை இல்லாம கிடைச்ச பொண்ணு'... 'அலறல் சத்தம் கேட்டு ஓடியபோது கண்ட பயங்கரத்தால்'... 'கலங்கி நிற்கும் குடும்பத்தினர்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோத்தகிரியில் குளிக்க சென்றபோது ஏற்பட்ட தீ விபத்தில் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த தம்பதி குணசேகரன் - யுவராணி. இவர்களுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். ரெனி ஷெர்சியா (18) எனும் அந்த பெண் தற்போது கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் உயரமான இடத்தில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுக்க ரெனி ஷெர்சியா முயற்சித்தபோது, அந்த கேன் தவறி அவருடைய தலையில் மண்ணெண்ணெய் கொட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் குளிப்பதற்காக குளியலறைக்கு சென்று அங்கிருந்த வாட்டர் ஹீட்டர் சுவிட்ச்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சுவிட்சிலிருந்து தீப்பொறி ஏற்பட்டு, ரெனி ஷெர்சியா மீது விழுந்து தீப்பிடித்துள்ளது. ஏற்கனவே அவர் மீது மண்ணெண்ணெய் கொட்டி இருந்ததால் அவருடைய உடல் முழுவதும் தீ வேகமாக பரவியுள்ளது.
இதனால் அவர் வலிதாங்க முடியாமல் அலற, சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி சென்று பார்த்தபோது அவர் மீது தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் உடனடியாக அவர் மீது பிடித்த தீயை அணைத்து, படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகளை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கிருந்து பின்னர் 90 சதவீதம் தீக்காயமடைந்திருந்த அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கல்லூரி மாணவி தீ விபத்தில் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.