'நியாயமான திருடன்...' 'மன்னிப்பு கடிதம் வேற...' 'இருந்தாலும்' அவங்க 'நிலைமை' அப்படி...
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தானில் வேலைப்பார்த்து வந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர், மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு, சைக்கிளை திருடிக்கொண்டு 250 கிலோமீட்டர் கடந்து சொந்த ஊர் திரும்பிய சம்பவம் நடந்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக போடப்பட்டுள்ள ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சிறப்பு ரயில், பேருந்து வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தனிமைப்படுத்திவிடுவார்கள் என அஞ்சி கால்நடையாக சொந்த ஊர் திரும்புவது தொடர்கதையாகி வருகிறது.
சிலர் லோடு லாரிகளில் மறைந்திருந்து சொந்த ஊர் செல்கின்றனர். பலர் நடந்தே தங்கள் ஊருக்கு செல்கின்றனர். சிலர் சைக்கிளில் பல நூறு கிலோ மீட்டர் கடந்து வீட்டை அடைகிறார்கள். நாட்டில் முதல் முறையாக நகரத்திலிருந்து கிராமத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக புலம்பெயர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ராஜஸ்தானில் வேலைப்பார்த்து வந்த முகமது இக்பால் என்ற புலம்பெயர் தொழிலாளி, பாரத்பூர் மாவட்டம் ராரா கிராமத்தில் வேலைபார்த்து வந்தார். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் வேலையிழந்து தவித்து வந்த அவர், சொந்த ஊர் செல்ல முயற்சித்து வந்தார். இதையடுத்து, அங்கு சாஹாப் சிங் என்பவரது வீட்டில் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிக் கொண்டு 250 கி.மீ தொலைவில் உள்ள சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் பரேலிக்கு சென்றுள்ளார்.
சைக்கிள் உரிமையாளருக்கு அவர் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “நான் ஒரு தொழிலாளி, உதவியற்றவன். உங்கள் சைக்கிளை எடுத்துக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். நான் சொந்த ஊரை அடைய வேறு வழியில்லை, எனக்கு ஒரு சிறப்பு திறன் கொண்ட குழந்தை உள்ளது. நான் பரேலிக்கு செல்ல வேண்டும்.” என கூறியுள்ளார்.