‘கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானதுதான்’... ‘புதிய ஆதாரத்தை காட்டும் விஞ்ஞானிகள்’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | May 13, 2020 08:16 AM

கொரோனா வைரசின் நெருங்கிய உறவு வைரசை அடையாளம் கண்டுப்பிடித்துள்ள விஞ்ஞானிகள், இது கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது, ஆய்வுக்கூடத்தில் அல்ல என்பதற்கு ஆதாரமாக அமைகிறது என்று கூறி உள்ளனர்.

Coronavirus naturally evolved not in the Wuhan lab, Virus RmYN02

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதா அல்லது வூஹான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதா என்பதில் பெருத்த சர்ச்சை நிலவுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உகான் ஆய்வுக்கூடத்தில் உருவானது அல்ல, இயற்கையாக உருவானதுதான் என்று சீன விஞ்ஞானிகள் புதிய ஆதாரத்தை காட்டுகின்றனர்.

அதன்படி வவ்வால்களில் சார்ஸ் கோவ்-2-வின் நெருங்கிய உறவு வைரசை (RmYN02) விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். இதுதான், கோவிட்-19 என்று அழைக்கப்படுகிற கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்தில் உருவாக்காமல் இயற்கையாக உருவானதற்கு ஆதாரம் என்று ஆராய்ச்சி நடத்தியுள்ள ஷான்டாங் முதல் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இது குறித்த ஆய்வுக்கட்டுரை, ‘கரண்ட் பயாலஜி’ பத்திரிகையில் வெளியாகி உள்ளது. அதில் சமீபத்தில் அடையாளப்பட்ட வவ்வால் கொரோனா வைரஸ் (RmYN02), சார்ஸ் கோவ்-2 வைரசின் நெருங்கிய உறவு வைரஸ், அதில் இதற்கான மரபணு வரிசை காணப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இந்த வைரசின் ஸ்பைக் புரதத்தின் எஸ்-1 மற்றும் எஸ்-2 துணைக்குழுக்களின் சந்திப்பில், சார்ஸ் கோவ்-2-வைப் போலவே அமினோ அமிலங்களின் செருகல்கள் உள்ளன.

கொரோனா வைரஸ் பரிணாம வளர்ச்சியில் இந்த வகையான அசாதாரண செருகும் நிகழ்வுகள் இயற்கையாக நடக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி ஆராய்ச்சி நடத்தியவர்களில் ஒருவரான பேராசிரியர் வெய்பெங் ஷி கூறியதாவது: 'எஸ்-1 மற்றும் எஸ்-2 இடைச்செருகலானது மிகவும் அசாதாரணமானது. இது ஆய்வுக்கூடத்துடன் தொடர்புடையது என்று கூறப்பட்டது. ஆனால் எங்கள் ஆராய்ச்சியில், இந்த நிகழ்வுகள் வனவிலங்குகளில் இயற்கையாகவே நடக்கின்றன என்று தெரிய வந்துள்ளது. இது சார்ஸ் கோவ்-2 வைரஸ் ஆய்வுக்கூடத்தில் இருந்து தப்பியது என்பதற்கு எதிரானது.

புதிய வைரசான RmYN02, யுனான் மாகாணத்தில் 227 வவ்வால்களின் மாதிரிகளின் பகுப்பாய்வில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மே-அக்டோபர் மாதங்கள் இடையே இது கண்டுபிடிக்கப்பட்டது. சார்ஸ் கொரோனா வைரசின் உறைவிடம் வவ்வால்கள் என 2005-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, வவ்வால்கள்தான் தொற்றுநோய்க்கான பிறப்பிடம் என்பதை அறிந்து அதுகுறித்த ஆய்வில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.

இறுதியாக, வவ்வால்களில் அடையாளம் காணப்பட்ட வைரசில் இது போன்ற செருகும் நிகழ்வு, இந்த வகையான செருகல்கள் இயற்கையான தோற்றம் கொண்டவை என்று உறுதியாக கூறுகின்றன. உண்மையில் விலங்கு பீட்டா கொரோனா வைரஸ், இயற்கையாகவே ஏற்படலாம். எங்கள் ஆய்வு, சார்ஸ் கோவ்-2-ன் பரிணாமா வம்சாவளியை பற்றி மேலும் வெளிச்சம் தந்துள்ளது. அதிகமான வன விலங்குகளின் மாதிரியானது வைரஸ்களை வெளிப்படுத்தும் என்று ஆய்வு வலுவாக தெரிவிக்கிறது' என்று கூறியுள்ளார்.