கொரோனா 'பாதிப்பு' இருக்கு ஆனா... 'வைரஸ்' பரவலில் இருந்து மீண்டுவரும்... 'சீனாவிற்கு' எழுந்துள்ள 'புதிய' சிக்கல்...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கு எந்தவித நோய் அறிகுறியும் தென்படாமால் இருப்பது சீனாவிற்கு புதிய சிக்கலாக எழுந்துள்ளது.
சீனாவில் புதிதாக வெளிநாட்டிலிருந்து திரும்பிய 38 பேர் உட்பட 42 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் எந்தவித நோய் அறிகுறியும் தென்படாத 47 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 14 பேர் வெளிநாட்டிலிருந்து சீனா திரும்பியவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அறிகுறிகள் இன்றி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு இருமல், காய்ச்சல், தொண்டைக்கட்டு போன்ற அறிகுறிகள் எதுவும் இருக்காது.
இதையடுத்து இவர்களால் மற்றவர்களுக்கும் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் அங்கு கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள், குணமடைந்தவர்களுக்கு மீண்டும் பரிசோதனை நடத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் வுஹானில் 76 நாட்களுக்குப் பிறகு முழுவதுமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் மீண்டும் கொரோனா பரவலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இரண்டாவது கொரோனா அலை வீச வாய்ப்புள்ளதாக நேற்று அதிபர் ஜீ ஜின்பிங் எச்சரித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நோய் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1097 ஆக உயர்ந்துள்ளது. இதில் 349 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். இதைத்தொடர்ந்து புதிய நடைமுறைப்படி சீனாவில் நோய் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் குணமான பின்பும் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும், அப்படி தனிமையில் இருப்பவர்களுடைய உடல் வெப்ப நிலை, மூச்சுக்குழல் பிரச்சினைகள் ஆகியவற்றை தினமும் கவனிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.