கொரோனா அறிகுறியுடன்... 'முதல்வர்' கூட்டத்தில் பங்கேற்ற 'சுகாதாரத்துறை' செயலாளர்... அடுத்தடுத்து 'காத்திருந்த' அதிர்ச்சிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Apr 10, 2020 01:57 AM

கொரோனா அறிகுறியுடன் முதல்வர் நடத்திய கூட்டத்தில் மத்திய பிரதேச சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் பல்லவி ஜெயின் கலந்து கொண்ட சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Madhya Pradesh Officers Accused Of Dodging COVID-19 Checks

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு வழிகளில் கடுமையாக போராடி வருகின்றன. ஆனால் அரசு அதிகாரிகள் சிலரின் அலட்சிய போக்கு மாநில அரசுகளின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கி விடுகின்றன. சமீபத்தில் ரெயில்வே உயர் அதிகாரி தன்னுடைய மகனுக்கு கொரோனா இருந்ததை மறைத்து சிக்கிக்கொண்டார்.

இதேபோல ரெயில்வே நிலையத்தில் அதிகாரி ஒருவர் அலட்சியமாக பரிசோதனை நடத்தி அது தொடர்பான வீடியோக்கள் வைரலாக கடைசியில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தெலுங்கானா சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து கடைசியில் 3 பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் மத்திய பிரதேச சுகாதாரத்துறை முதன்மை செயலர் பல்லவி ஜெயின் தற்போது இடம்பெற்று இருக்கிறார்.

கடந்த 3-ம் தேதி சுகாதாரத்துறை இயக்குநர் விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடைநிலை ஊழியர்களுக்கு கூட கொரோனா இல்லாத நிலையில் அவருக்கு எப்படி ஏற்பட்டது என விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் தென் ஆப்பிரிக்கா சென்று வந்த தகவலை மறைத்து வழக்கம்போல அலுவலக பணிகளில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதேபோல முதன்மை செயலை பல்லவி ஜெயின், சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் வீனா சின்ஹா, துணைக் கூடுதல் இயக்குநர் வீரேந்திர குமார் சௌத்திரியையும் கொரோனா தாக்கியிருப்பது தெரியவந்தது.

இதில் பல்லவி, வீனா இருவரின் மகன்களும் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து மத்திய பிரதேசம் திரும்பி இருக்கின்றனர். ஆனால் இருவருமே தங்களது மகன்களின் டிராவல் ஹிஸ்டரியை மறைத்து அவர்களை வீடுகளில் தங்கவைத்து இருக்கின்றனர். அவர்களிடம் இருந்து இருவருக்கும் கொரோனா பரவி இருக்கிறது. ஆனால் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளாமல் தொடர்ந்து அவர்கள் அலுவலக பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். உச்சக்கட்டமாக மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் நடத்திய கூட்டத்தில் பல்லவி ஜெயின் கொரோனா அறிகுறியோடு கலந்து கொண்டுள்ளார்.

தற்போது கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் பல்லவி ஜெயின் தான் யாரையும் தொடவில்லை. தன்னால் யாருக்கும் கொரோனா பரவவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார். மத்திய பிரதேச சுகாதாரத்துறை அதிகாரிகள் 83 அதிகாரிகள் மத்தியில் சோதனை நடத்தப்பட்டதில் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் 12 போலீசாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அதிர்ந்து போன அதிகாரிகள் பல்லவி ஜெயினின் உதவியாளர்கள், 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மூத்த அதிகாரிகள், உதவியாளர்கள், பியூன்கள் என பலரையும் தனிமைப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய பிரதேச மனித உரிமைகள் ஆணையம் மாநிலத்தின் முதன்மை செயலர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு,''பல்லவி ஜெயின் கொரோனா தொற்றுடன் கூட்டங்களில் கலந்து கொண்டது ஏன்? அவர் ஏன் கொரோனா பரிசோதனை நடத்த ஒத்துழைப்பு தரவில்லை,'' என கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு மாநிலத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகளே பொறுப்பில்லாமல் நடந்து கொண்டு மற்றவர்களுக்கும் கொரோனா பரவ காரணமாக இருந்தது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.